ADVERTISEMENT

கரன்சி மற்றும் தங்கம் பண்டமாற்றுக்காக இலங்கைக்கு கடத்த முயன்ற மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்! 

08:13 AM Jan 05, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தின் முக்கிய விளைபொருளான மஞ்சளை, மூட்டை மூட்டையாகக் கொள்முதல் செய்யப்பட்டு அதனைத் தூத்துக்குடி கடல் மார்க்கமாக படகு மூலம் இலங்கைக்குக் கடத்தப்படுவது அண்மை நாட்களில் சகஜமாகிவிட்டது.

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் தூத்துக்குடிப் பகுதிகளில் இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட சுமார் 12 டன் விரளி மஞ்சள் மூட்டைகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு, வாகனங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வல்லங்கள் ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட 12 டன் மஞ்சள் இந்திய மதிப்பில் 26 லட்சம் மதிப்புள்ளது என்று சொல்லப்பட்டாலும், அதன் இலங்கை மதிப்பு அந்நாட்டுக் கரன்சியில் ஒரு கோடியையும் தாண்டும். குறிப்பாக இங்கே 120 ரூபாய்க்கு விற்கப்படும் மஞ்சளின் இலங்கை விலை மூவாயிரம். அதன் இந்தியக் கரன்சி மதிப்பு ஆயிரத்து ஐநூறு ரூபாய். அதனையே முறையாக இலங்கைக்கு அனுப்பினால் 120 ரூபாய் விலையான மஞ்சளுக்கு ஒன்றரை மடங்கு சுங்கத் தீர்வை என்பதால் அதனை ஏய்க்கும் வகையிலும், இலங்கையில் தேவை அதிகம் என்பதால் அதனைப் பயன்படுத்தி தங்கம் உள்ளிட்ட பண்ட மாற்றுக்காகவும் மஞ்சள் கடத்தப்படுகின்றன என்கின்றனர் காவல்துறையைச் சேர்ந்த மரைன் பிரிவு போலீசார்.

இதனிடையே நேற்று முன்தினம் (03/01/2021) தூத்துக்குடி வடபாகம் போலீசார் திரேஸ்புரம் கடற்கரைப் பக்கம் ரோந்து சென்றிருக்கிறார்கள். அது சமயம் அங்குள்ள படகு ஒன்றில் சிலர் மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தவர்கள், போலீசாரைக் கண்டதும் தப்பியோடியுள்ளனர். அதனைச் சோதனையிட்டதில் 30 மூடைகளில் மஞ்சள் சிக்கியுள்ளது, அதன் எடை 1,200 கிலோ, இந்திய மதிப்பில் 2 லட்சம். தூத்துக்குடிப் பகுதிகளில் பதுக்கி வைத்து இலங்கைக்குக் கடத்தப்பட முயன்றது தெரியவர, வடபாகம் போலீசார் அதனைக் கைப்பற்றியதுடன் தப்பியவர்களைத் தேடி வருகின்றனர். மேலும் இந்தக் கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்கிற விசாரணையும் மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமார் கூறுகையில், "தரையில் கடத்தப்படுகிறபோது தடுத்து கைப்பற்றிவிடுகிறோம். ஆனால் அவை படகுகள் மூலம் நடுக்கடலில் கைமாறி இலங்கைக்குக் கடத்தப்படுகின்றன. செயின் தொடர்பு போன்று செயல்படுகின்றனர். கடலில் நடப்பதை அதன் தடுப்பு காவல் படையினரின் பொறுப்பில் வருகிறது" என்றார்.

தமிழக வேளாண் பொருள் இலங்கையில் தங்கமாகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT