ADVERTISEMENT

பல விதமான கெட்டப்; யூடியூப் பார்த்து சம்பவம் செய்த இளைஞர் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

04:36 PM Jan 02, 2024 | ArunPrakash

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள கொல்லாபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் 77 வயதான தனபுஷ்பம். கடந்த 2021 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வீட்டின் முன்பக்க கதவைத் திறந்துவைத்துவிட்டு வீட்டின் கொல்லைப்புறத்தில் முருங்கை கீரை பறித்து விட்டு வீட்டுக்குள் சென்றார். அப்போது வீட்டிற்குள் மறைந்திருந்த மர்ம நபர் தனபுஷ்பத்தை தாக்கி, கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். கீழே விழுந்ததில் காயமடைந்த பாட்டியை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனைக் கேள்விப்பட்ட பேரளம் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளராகவும், தற்போதைய ஆய்வாளரான சுகுணா, மருத்துவர்களிடம் பேசி பாட்டி தனபுஷ்பத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கச் செய்ததோடு, அவரிடம் புகார் பெற்று வழக்குப் பதிவுசெய்து அதிரடியாக விசாரணையைத் துவங்கினார்.

ADVERTISEMENT

சி.சி.டி.வி காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், கீரனூரைச் சேர்ந்த விஜய் என்கிற இளைஞன் கொரியர் கொடுப்பதுபோல, தனபுஷ்பம் பாட்டியின் வீட்டை பலவேடங்கள் அணிந்து நோட்டமிட்டு, இறுதியில் முஸ்லிம் பெண் போல் கருப்பு புர்கா அணிந்து திருடிச் சென்றதை கண்டுபிடித்தார், பிறகு நகையைத் திருடிய விஜய் சென்னையில் பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்து, கைது செய்து, நகையை மீட்டு பாட்டியிடம் கொடுத்தார்.

ADVERTISEMENT

அப்போது திருவாரூர் மாவட்டத்தில் காவல்துறை செயல்பட்ட விதம் பொதுமக்களே பாராட்டும் வகையில் இருந்தது. அதிரடியாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் சுகுணாவையும் சக காவலர்களையும் மாவட்ட எஸ்.பி.யும், நன்னிலம் டி.எஸ்.பி.யும் பாராட்டியுள்ளனர். கைதான விஜய் திருட்டில் ஈடுபடுவதற்காக, திருடுவது எப்படி என இணையதளத்தில் பார்த்து திருடச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்படி திருடினார், என்ன நடந்தது, எப்படி பிடித்தார்கள் என பேரளம் காவல் நிலைய ஆய்வாளர் சுகுணா அப்போது கூறியது, “கொரியர் போடுற வேலை பார்க்குற அந்தப் பையனோட அப்பாவுக்கு இரண்டு மனைவி, நிறைய பிள்ளைங்க, பாட்டி, தாத்தான்னு குடும்ப மெம்பர்ஸ் அதிகமாம். தீபாவளிக்கு ஊரே புது துணி, பட்டாசோட கொண்டாடுறத பார்த்து, நம்ம குடும்பத்துல நடக்கலயேன்னு வருத்தப்பட்டு, திருடியாவது இதையெல்லாம் செய்யணும்னு முடிவெடுக்குறார். அப்போதான் கொரியர் போடுற மாதிரி வயதான பாட்டி இருக்குற வீட்ட நோட்டமிட்டுள்ளார். ஒரே மாதிரி வந்தா சந்தேகம் வரும்னு யூடியூப்ல திருடுவது எப்படின்னு தேடிப்பிடித்து, அதுல கிடைத்த தகவலின்படி முஸ்லிம் பெண்போல வேடமணிந்து போக முடிவெடுத்து, புர்காவோடு வீட்டிற்குள் புகுந்து நகையைத் திருடியுள்ளார். அக்கம்பக்கத்துல விசாரிச்சா, பெண்ணுன்னுதான் தெரிஞ்சது, ஆனாலும் சிசிடிவிய ஆய்வுசெய்து கண்டுபிடித்தோம்” என்றார். அந்த வழக்கு நன்னிலம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடந்துவந்தது.

இந்தநிலையில், திருட்டில் ஈடுபட்ட விஜய்க்கு இன்று 2.1.24ஆம் தேதி நன்னிலம் குற்றவியல் நடுவர் பாரதிதாசன், மேற்கண்ட குற்றத்திற்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 10000 அபராத தொகையும், அபராத தொகை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் இந்த வழக்கில் அனைத்துவித ஆதாரங்களையும் திரட்டி கொடுத்த ஆய்வாளர் சுகுணாவையும், மற்றும் செந்தில்குமாரையும் அரசு வழக்கறிஞர் பாரட்டினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT