ADVERTISEMENT

''ஒருவேளை கைலாஷாவிற்கு போனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்''-அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

05:28 PM Feb 12, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக, இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஏறத்தாழ அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சின்னங்கள் முறையாக கட்சி வேட்பாளர்களுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது மொத்தம் 77 பேர் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.

இன்று ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''பாஜகவும் அதிமுக கூட்டணியில் உள்ளதா இல்லையா. ஒருவர் இருக்கிறது என்கிறார் ஒருவர் இல்லை என்கிறார். அவர்களுக்குள் முதலில் ஒரு முடிவுக்கு வரட்டும். அவர்களுக்குள் இப்பொழுது என்ன போட்டி இருக்கிறது என்று கேட்டால் இபிஎஸ் பெரிய ஆளா? ஓபிஎஸ் பெரிய ஆளா? யாருக்கு செல்வாக்கு அதிகம். கட்சிக்குள்ள யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பதான நிலைதான் அதிமுகவில் இருக்கிறது. முதலில் அவர்கள் ஒரு முடிவுக்கு வரட்டும். இப்பொழுது நான்காகவோ ஐந்தாகவோ பிரிந்து கிடக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு சரியாக ஞாபகம் இல்லை அதனால் கேட்டேன்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் 'அதிமுகவுக்கு எதிர்காலம் என்று ஒன்று இருக்கிறதாக நீங்கள் நினைக்கிறீர்களா?' என கேட்க, ''கைலாச நாடு என்ற நாடு இருக்கிறதே அந்த மாதிரி ஏதாவது ஒரு நாட்டுக்கு போனார்கள் என்றால் புதிதாக ஆளுக்கு ஒரு பகுதிகளை பிரித்து இது ஓபிஎஸ் பகுதி; இது ஈபிஎஸ் பகுதி; இது டிடிவி பகுதி என இன்னும் எத்தனை டீம் இருக்கோ அத்தனையும் பிரித்துக் கொண்டு ஒவ்வொரு பகுதியாக ஆள முயற்சி செய்யலாம்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT