ADVERTISEMENT

ஆட்டோ விளக்கால் நடந்த கொலையா? மர்மக் கும்பலைக் கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்..

05:01 PM Dec 17, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

இசக்கிதுரை

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியார்பட்டியிலிருப்பவர் இசக்கிதுரை (37). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு, ரெட்டியார்பட்டி ஊத்துமலைச் சாலையை ஒட்டியுள்ள தெருவில் படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஊத்துமலைப் போலீசார் சண்முகராஜ் என்கிற கட்டைராஜை கைது செய்தனர்.

கொலையுண்ட ஆட்டோ டிரைவரின் உடலை வாங்க மறுத்து, அவரது மனைவி உறவினர்கள் ரெட்டியார்ப்பட்டியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது, இந்தக் கொலையில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். அதேபோல், கொலையானவரின் மனைவிக்கு அரசு வேலை தர வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனால் போக்குவரத்துத் தடைப்பட்டது.


தென்காசி கோட்டாட்சியர் சரவண கண்ணன், டி.எஸ்.பி.களான பொன்னிவளவன், பாலசுந்தரம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500-க்கான காசோலையை இசக்கித்துரையின் மனைவியிடம் கொடுத்தனர். மேலும், அவர்கள் முன்வைத்த மற்ற கோரிக்கைகளை, அரசுக்குப் பரிந்துரை செய்வதாகத் தெரிவித்த பிறகே சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.


இது குறித்து, மேலும் விசாரிக்கையில் ஆட்டோ டிரைவரான இசக்கிதுரை கடந்தவாரம் ரெட்டியார்பட்டிச் சாலையில் வரும்போது ஆட்டோவின் மிக வெளிச்சமான ‘லெட் பல்பு’ விளக்குப் போட்டவாறு வந்திருக்கிறார். அதனால் எதிரில் வந்தவர் எரிச்சலால், ஆட்டோவை வழிமறித்து இசக்கிதுரையிடம் தட்டிக் கேட்டதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பின் சம்பவத்தன்று ஒருவர், வீட்டிலிருந்த இசக்கிதுரையை அழைத்துச் சென்றிருக்கிறார். அதனை அவரது மனைவியும் பார்த்திருக்கிறார். பிறகுதான் இசக்கிதுரையை வெட்டிக் கொலை செய்துள்ளனர். போலீஸ், ஒருவரை மட்டுமே கைது செய்திருக்கிறது. தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும் என்கின்றனர் அப்பகுதிமக்கள்.


இதுதான் காரணமா? அல்லது தொழில் போட்டியா? எனப் பல கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலையால் அப்பகுதி பதற்றத்திலிருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT