
நெல்லை மாவட்டத்தின் கடையநல்லூர் மக்கள் நெருக்கம் கொண்ட நகரம். இங்குள்ள அரசு மருத்துவமனையின் மேல்புற ஒதுக்குப்பகுதியில் அன்றாடம் நகரில் சேரும் கோழிக் கழிவுகள் மற்றும் ஆட்டிறைச்சிக் கழிவுகளைக் கொட்டுவது வழக்கமாக இருந்திருக்கிறது. இரத்தமும் சதையுமாக இருக்கும் அந்தக் கழிவுகளை அன்றாடம் நாய்களின் கூட்டம் தின்று வருவதன் காரணமாக அவைகளுக்கு வெறி ஏறியதாகச் சொல்லப்படுகிறது. மேலும் அந்த இடத்தில் 10க்கும் மேற்பட்ட நாய்கள் அன்றாடம் சதைக்கழிவுகளைத் தின்று வருகின்றன என்கிறார்கள் அந்தப் பகுதியினர்.
இதனிடையே கடையநல்லூர் மேற்கு மலம்பாட்டடை பகுதியைச் சேர்ந்த செய்யது அலி மகனான சிறுவன் ஆதில்(7) கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப் பக்கமாகச் சென்றிருக்கிறான். அது சமயம் அந்தச் சிறுவனை சுற்றிய 10க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் கூட்டம் அவனைச் சுற்றி வளைத்துக் கடித்துக் குதறியிருக்கிறது. மட்டுமல்ல அப்படியே அந்தச் சிறுவனை காட்டுப்பகுதியை நோக்கி இழுத்துச் சென்றபோது சிறுவனின் கதறல் கேட்டு அந்த வழியாக சென்ற சிலர் நாய்களை விரட்டிவிட்டு படுகாயமடைந்த சிறுவன் ஆதிலை கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்திருக்கின்றனர். அங்கே ஆரம்பகட்ட சிகிச்சைக்குப் பின்பு தென்காசி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். வெறி நாய் கடிகளால் படுகாயமுற்ற சிறுவனுக்கு அங்கே அவசர சிகிச்சை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த தி.மு.க.வின் வ.மா.செ.செல்லத்துரை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் ஆதிலை பார்வையிட்டு பெற்றோர்களுக்கு ஆறுதலும் சொன்னார். தொடர்ந்து சிறுவனின் உடல் நலம் மற்றும் மருத்துவ சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தவர் மாவட்டக் கழகம் சார்பில் நிவாரண உதவிகளும் வழங்கியிருக்கிறார். தொடர்ந்து கடையநல்லூர் நகராட்சி ஆணையரை தொலைபேசியில் தொடர்பு கொண்டவர் சிறுவன் ஆதிலின் நிலைமைகளைச் சொல்லி கடையநல்லூரைச் சுற்றித் திரியும் வெறிநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அதே சமயம் நகரவாசிகளும் இந்தக் கொடூர சம்பவம் காரணமாக பீதியில் உறைந்து போனவர்கள் நகராட்சி நிர்வாகம் உடனடியாக வெறிநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)