ADVERTISEMENT

அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருட்டு; சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

07:34 PM Apr 22, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு முனிசிபல் காலனி 3-வது கிராஸ் தியாகி குமரன் வீதியைச் சேர்ந்தவர் தாமோதரன் (57). ஈரோடு என்.எம்.எஸ். காம்பவுண்டில் உள்ள டெக்ஸ்டைல்சில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை வணக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். மதியம் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு துணிமணிகள் கலைந்து சிதறிக் கிடந்தது. பீரோவில் வைத்திருந்த கம்மல் தோடு, மோதிரம் என முக்கால் பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கம் என மொத்தம் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான நகை, பணம் திருடு போய் இருந்தது.

இதுகுறித்து தாமோதரன் அளித்த புகாரின் பேரில் ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள் திருட்டு நடந்த வீட்டில் கைரேகைகளைச் சேகரித்தனர். குடியிருப்புப் பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் வீரப்பன்சத்திரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட சின்னமுத்து வீதியில் அடுத்தடுத்த சந்துகளில் உள்ள இரண்டு வீடுகளில் திருட்டு நடந்துள்ளது. ஒரு வீட்டில் வெள்ளி குத்துவிளக்கும் வெள்ளி கொலுசும் திருடு போயிருந்தது. மற்றொரு வீட்டில் ரூ. 1 லட்சம் ரொக்கப் பணம் திருடு போயிருந்தது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் ஒரு நபர் நடந்து செல்வதும் திருட்டு நடந்த வீட்டிலிருந்து செல்வதும் பதிவாகி இருந்தது. ஈரோடு மாநகர் பகுதியில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருட்டு நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மூன்று திருட்டிலும் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT