ADVERTISEMENT

கூலித்தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவம்... திருச்சி மத்திய சிறையில் நான்குபேர் அடைப்பு.... மேலும் 6 பேருக்கு வலைவீச்சு!! 

01:13 PM Feb 06, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தஞ்சை பாபநாசம், அம்மாபேட்டை, பூண்டி மேலத்தெருவைச் சேர்ந்த விவசாயக் கூலித்தொழிலாளி ராகுல் என்பவரை, பச்சைத் துணியால் கண்ணைக் கட்டி அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் மரத்தில் கட்டி வைத்து பிரம்பால் அடித்துள்ளனர். வலியைத் தாங்க முடியாமல் அந்த கூலித் தொழிலாளி ''வேணாம் அண்ணா... வேணாம் அண்ணா...'' என கதறி, மயக்கமடைந்த நிலையிலும் கடுமையாக தாக்கப்பட்டார். அதுதொடர்பான வீடியோ காட்சிகள் அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் கண்டனங்களைப் பெற்றது. செய்யாத குற்றத்திற்காக தான் தாக்கப்பட்டதாக கூறிய கூலித்தொழிலாளி ராகுல், இதனால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பணம் திருடியதாகக் கூறி கூலித்தொழிலாளி தாக்கப்பட்டதும், தாக்குதல் சம்பவத்தின்போது அருகில் இருந்தவர்கள் அந்தக் காட்சிகளை வீடியோவாக பதிவுசெய்து அதை சமூக வலைதளத்தில் பரப்பியதும் தெரிய வந்துள்ளது. அதேபோல் பணம் திருடியதாக எந்தக் காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் கூலித் தொழிலாளியைத் தாக்கும் அந்த வீடியோ காட்சியும், அவர் கதறும் காட்சியும் காண்போரைப் பதற வைத்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது கொலை முயற்சி, வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ள போலீசார் சரத், ராஜதுரை, பார்த்திபன், விக்கி ஆகிய நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பாபநாசம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் .

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT