
தஞ்சை பாபநாசம் அருகே, விவசாயத் தொழிலாளியை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் தெடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திருந்தது. இந்தச் சம்பவத்தில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சை பாபநாசம், அம்மாபேட்டை, பூண்டி மேலத்தெருவைச் சேர்ந்த விவசாயக் கூலித்தொழிலாளி ராகுல் என்பவரை, பச்சைத் துணியால் கண்ணைக் கட்டி அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் மரத்தில் கட்டி வைத்து பிரம்பால் அடித்துள்ளனர். வலியைத் தாங்க முடியாமல் அந்த கூலித் தொழிலாளி ''வேணாம் அண்ணா... வேணாம் அண்ணா...'' என கதறி, மயக்கமடைந்த நிலையிலும் கடுமையாக தாக்கப்பட்டார். அதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் கண்டனங்களைப் பெற்றது. செய்யாத குற்றத்திற்காக தான் தாக்கப்பட்டதாக கூறிய கூலித்தொழிலாளி ராகுல், இதனால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பணம் திருடியதாகக் கூறி கூலித்தொழிலாளி தாக்கப்பட்டதும், தாக்குதல் சம்பவத்தின்போது அருகில் இருந்தவர்கள் அந்தக் காட்சிகளை வீடியோவாக பதிவுசெய்து அதை சமூக வலைதளத்தில் பரப்பியதும் தெரிய வந்துள்ளது. அதேபோல் பணம் திருடியதாக எந்த காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் கூலித் தொழிலாளியைத் தாக்கும் அந்த வீடியோ காட்சியும், அவர் கதறும் காட்சியும் காண்போரைப் பதற வைத்தது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விக்னேஷ்வரன், விவேக், பார்த்திபன் உட்பட 8 பேர் மீது கொலை முயற்சி, வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ள போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.