ADVERTISEMENT

தென்மாவட்ட மக்களால் மறக்க முடியாத அக்டோபர் பத்தாம் தேதி!!

01:00 PM Oct 10, 2018 | sakthivel.m

தென்மாவட்ட மக்களால் மறக்க முடியாத ஒரு நாளாக இன்றைய நாளான அக்டோபர் பத்தாம் தேதி இருக்கிறது. அப்படி என்னதான் இந்த அக்டோபர் பத்தாம் தேதி. முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்த நாள் தான் இந்த அக்டோபர் பத்தாம் தேதி.

ADVERTISEMENT

ஆம் 123 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு முதன்முதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த வரலாற்றுச் சுருக்கத்தை பார்ப்போம்..

ADVERTISEMENT

''நீரின்றி அமையாது உலகு'' என்பது வள்ளுவன் வாக்கு. உயிர்களின் வாழ்வாதாரங்களில் மிக முக்கியமானது நீர் மனித உயிர்களால் உற்பத்தி செய்யமுடியாத இந்த நீர், இயற்கை மனிதனுக்கு அளித்த மாபெரும் கொடையாகும்.

18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தென்தமிழகத்தை வளப்படுத்தி வந்த ஆறுகள் பொய்த்துப்போனதால் சீர்குலைந்த வேளாண்மையை மேம்படுத்தவும், இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், சுந்தரகிரி மலையில் சிவகிரி சிகரத்தில் தோன்றி பெருந்துறையாறு, சின்னாறு, சிறுதோணியாறு, கட்டப்பனையாறு, இடமலையாறு மற்றும் முல்லையாற்றை சேர்த்துக்கொண்டு 300 கிலோமீட்டர் வடமேற்கு திசையில் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும் பெரியாறை தென்தமிழகம் நோக்கி திருப்பி கொண்டுவர முயற்சிகள் நடைபெற்றது.

1798-ல் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் மற்றும் அமைச்சர் முத்து அருளப்பரினால் துவக்கப்பட்டது.1808-ல் ஜேம்ஸ் கால்டுவெல், 1862-ல் மேஜர் ரைவீஸ், மேஜர் பேயின், 1870-ல் ஸ்மித் என பலர் ஆய்வுகளும், திட்டங்களும் தயார் செய்தாலும், இறுதியில் முல்லையாற்றிற்கும் பெரியாற்றிற்கும் நடுவே 152 அடி உயர அணைகட்ட முடிவு செய்தது பிரிட்டீஷ் அரசுதான். அணைகட்டும் பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டது என்பதால் அணைநீரானது எல்லாக்காலங்களிலும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களோடு 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை அக் 29, 1886-ல் செய்துகொண்டது ஆங்கிலேய அரசு.

அந்த ஒப்பந்தத்தில் நீண்ட பல்நோக்கு திட்டத்தின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு அணை கட்டப்பட்டதால், இடர்பாடுகளையும், சேதங்களையும், தேவையற்ற பூசல்களையும் நீக்க இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தத்திற்கு உட்பட்ட நிலத்தில் தமிழக அரசு நீர்பாசனம் மற்றும் மின்சார உற்பத்திக்கான செயல்பாடுகளை செய்துகொள்ளலாம். அணையின் மராமத்துப் பணிகள் செய்வதற்கான பொருட்களை எடுத்துச்செல்ல முழுமையான உரிமை வழங்குவதுடன் அதற்கு வரி எதுவும் கிடையாது. அணையினுள் அடங்கும் மரம் மற்றும் மரக்கட்டைகளை, அணையின் நலம் கருதி செயல்படுத்தும் திட்டங்களுக்கு தமிழக அரசு எவ்வித கட்டணங்களும் கட்டவேண்டியது இல்லை. போக்குவரத்தின் முழு உரிமையும், பாதுகாப்பும் தமிழகத்திற்குச் சொந்தம்.

அணையின் அனைத்து செயல்பாடுகளுக்கும் உரிமை, அதிகாரம், சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தான் 43 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கர்னல் பென்னிகுக் தலைமையில் பிரிட்டீஷ் ராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணைகட்டும் பணியினை மேற்கொண்டது. அவரது தீவிர முயற்சியினால், 1895ல் முல்லைப்பெரியாறு அணையை கட்டிமுடிக்கப்பட்டது.

1895-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி (இந்திய நேரப்படி) மாலை 6.00 மணிக்கு சென்னை மாகாண கவர்னர் வென்லாக் தேக்கடிக்கு வந்து, பெரியாறு அணை தண்ணீரைத் தமிழகப் பகுதிக்கு திறந்துவைத்தார்.

அன்றிலிருந்து இன்று வரை கடந்த 123 ஆண்டுகளாய், தலைமுறைகள் கடந்தும் தண்ணீர் கொடுத்து தமிழகத்தை காத்து வருகிறது முல்லை பெரியாறு அணை. முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு, முதன் முதலாக தண்ணீர் திறக்கப்பட்ட நாளான அக்டோபர் 10-ம் தேதியை கடந்த பல ஆண்டுகளாக தேனி உள்பட நான்கு மாவட்டங்களிலுள்ள பொதுமக்களும், விவசாயிகளும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த முல்லைப் பெரியாறு மூலம் நீர் தந்த வள்ளல் கர்னல் பென்னிகுக்கின் புகழும் உலகம் இருக்கும் வரை ஒழித்து கொண்டு இருக்கும் என்பது தான் உண்மை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT