ADVERTISEMENT

புயலில் சிக்கி நடுகடலில் மாயமான பத்து மீனவர்கள்; கதறி அழுத உறவினர்கள்..!

06:06 PM May 15, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

கொச்சி அருகே புயலில் சிக்கி நாகை மீனவர்களின் படகு நடுக்கடலில் கவிழ்ந்ததால் நடுக்கடலில் உயிருக்கு போராடும் 10 மீனவர்களை இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் கொண்டு மீட்க வேண்டும் என நாகை சாமந்தான்பேட்டை மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கொச்சி மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மணிகண்டன் உள்ளிட்ட அவரது தந்தை இடும்பன், சகோதரர்கள் மணிவேல் உள்ளிட்ட 10 மீனவர்கள் கடந்த 29 ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

ADVERTISEMENT

அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ புயல் எச்சரிக்கையை அறிந்த நாகை மீனவர்கள், அவசர அவசரமாக விசைப்படகை கொச்சி துறைமுகத்தை நோக்கி திருப்பினர். அதிகாலை 3 மணி அளவில் அரபிக் கடலை நோக்கி நாகை மீனவர்களின் விசைப்படகு சென்றுகொண்டிருந்த பொழுது படகு திடீரென அதிவேகமாக புயலில் சிக்கியது. அந்த சமயத்தில் எழுந்த ராட்சத அலையில் விசைப்படகு தூக்கி தலைகீழாக வீசப்பட்டதால் மீனவர்களின் படகு கடலில் மூழ்கியது. அந்த படகில் இருந்த 10 மீனவர்கள் நடுக்கடலில் தூக்கி வீசப்பட்டு மாயமாகினர். இதனை தூரத்தில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய நாகையை சேர்ந்த மீனவர்கள் சிலர் சாமந்தான்பேட்டை கிராமத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அறிந்த மீனவர்களின் உறவினர்கள் புயலில் சிக்கி மாயமான 10 மீனவர்களை மீட்க வேண்டும் கதறி அழுது புரண்டு வருகின்றனர். மேலும் நடுக்கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நாகை மீனவர்களை மீட்க இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் கொண்டு தேடுதல் பணியை முடுக்கி விட வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT