ADVERTISEMENT

முன்னாள் அமைச்சரின் கார் ஓட்டுநர் எனக்கூறி 38 லட்சம் ரூபாய் சுருட்டிய வாலிபரை காவலில் எடுத்து விசாரணை!

12:41 PM Apr 08, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுக முன்னாள் அமைச்சரின் வாகன ஓட்டுநர் எனக்கூறி, பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக 38 லட்சம் ரூபாய் சுருட்டிய வாலிபரை, இரண்டு நாள்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர் பட்டணத்தில் உள்ள பிரியம் நகரைச் சேர்ந்தவர் சுதாகரன் (35). இவர், முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் பரப்புரை வாகன ஓட்டுநராக வேலை செய்து வந்தார் எனக் கூறப்படுகிறது. இந்த செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்ட அவர், சேலம் மணியனூரைச் சேர்ந்த, தனியார் மருத்துவமனை செவிலியர் தேன்மொழி உள்ளிட்ட 9 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அவர்களிடம் 38 லட்சம் ரூபாய் வசூலித்துக்கொண்டு மோசடி செய்து விட்டார். இதையடுத்து பாதிக்கப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுதாகரனை கைது செய்தனர். இந்த வழக்கில் அவருடைய மனைவி பிரபாவதியை தேடி வருகின்றனர்.

மோசடி செய்த பணத்தை என்ன செய்தார்? சொத்துக்கள் வாங்கி போட்டுள்ளாரா? பணம் வாங்கியவர்களிடம் போலி பணி நியமன ஆணை வழங்கியிருந்தார் எனில், அந்த ஆணைகளை தயாரித்து கொடுத்தது யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்காக காவல்துறையினர் சுதாகரனை இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து, சேலம் 4வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், சுதாகரனை இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

அதையடுத்து, காவல் ஆய்வாளர் ஜெயதேவி தலைமையிலான தனிப்படையினர் அவரை காவலில் எடுத்தனர். இந்த மோசடியில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தவமணி என்ற பெண் ஒருவர் உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது. முதல்கட்ட விசாரணையின் போது, மோசடி செய்த பணத்தை தவமணியிடம் கொடுத்து வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதனால், சுதாகரனை ஈரோட்டில் உள்ள தவமணியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அவர், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் பரப்புரை வாகன ஓட்டுநராக வேலை செய்து வந்ததாகவும் விசாரணையின் போது தெரிவித்து இருந்தார். அதுகுறித்த உண்மைத்தன்மை பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT