ADVERTISEMENT

பிணமாக மீட்கப்பட்ட ஆசிரியர்! நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியல்!

05:06 PM Sep 23, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள கண்டமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை(52). இவர், தனது ஊருக்கு அருகிலுள்ள கம்மன் தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

இவர், திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் பகுதியில் திருமண மண்டபம் ஒன்றைக் கட்டியுள்ளார். அந்தத் திருமண மண்டபம் கட்டுவதற்காக ஆத்தூரைச் சேர்ந்த ஒருவரிடம் ஐந்து லட்சம் ரூபாய் கந்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். அந்த ஐந்து லட்சம் ரூபாயான அசலையும், அதற்கு வட்டியையும் ஒரே ஆண்டில் 11 லட்சமாக திருப்பி செலுத்த வேண்டும் என்ற கண்டிஷன் பெயரில் பணம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்தப் பணத்தைத் திருப்பித் தருவதற்கு காலதாமதமாகி உள்ளது. அதனால் கோபமடைந்த வட்டிக்கு பணம் கொடுத்த ஆத்தூர் நபர், ஆசிரியர் அண்ணாமலையின் திருமண மண்டபத்தின் சாவியை மிரட்டி பிடுங்கி வைத்துக்கொண்டு அந்த மண்டபத்தை அவர் நடத்தி வந்துள்ளார். மேலும் அண்ணாமலை, சிலரிடம் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்வதற்காக பணம் பெற்றுள்ளார். அந்தப் பணத்தை திருப்பித் தருவதற்கும் காலதாமதம் ஆகியுள்ளது. அதனால், பணம் கொடுத்த அவர்களும் கொடுத்த பணத்திற்கு வட்டியுடன் தருமாறு நிர்ப்பந்தம் செய்துள்ளனர். மேலும், அவர்களும் அத்திருமண மண்டபத்தை எழுதித்தருமாறு ஆசிரியர் அண்ணாமலையை மிரட்டி வந்துள்ளனர்.

இப்படி சுற்றிலும் கடன் தொல்லை தாங்க முடியாத ஆசிரியர் அண்ணாமலை, மன உளைச்சலுக்கும் நெருக்கடிக்கும் ஆளாகி இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென்று காணாமல் போயுள்ளார். அதன் பிறகு நேற்று காலை அவரது விவசாய நிலத்தில் பூச்சி மருந்தை குடித்து விட்டு தற்கொலை செய்துகொண்டு சடலமாக கிடந்துள்ளார். மேலும், அவர் இறப்பதற்கு முன்பு, கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்திய ஆத்தூரைச் சேர்ந்த நபர், வட்டிக்கு பணம் கொடுத்த பத்திர எழுத்தர் ஒருவர், மேல்மலையனூர் ஆசிரியர், கல்வித்துறை அதிகாரி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதத்தை முதலமைச்சருக்கு அனுப்புமாறு குடும்பத்தினருக்கு கடிதம் எழுதி வைத்திருக்கிறார்.

இதனிடையே, கந்துவட்டிக்கு கடன் கொடுத்த நபர்கள் கொடுத்த நெருக்கடி, மிரட்டல் தான் ஆசிரியர் தற்கொலைக்கு காரணம். எனவே, அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ஆசிரியரின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் செஞ்சி - சேத்துப்பட்டு சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர். ஆசிரியர் தற்கொலை சம்பவம் தொடர்பாக வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியருக்கு கந்து வட்டிக்கு கடன் கொடுத்து மிரட்டிய ஆத்தூரைச் சேர்ந்த வெங்கடேசன், பத்திர எழுத்தர் உட்பட கடன் கொடுத்து ஆசிரியரை மிரட்டிய அத்தனை பேரையும் கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT