/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3508.jpg)
விழுப்புரம் நகரில் உள்ள பாண்டியன் நகரில் வசிக்கும் பிரபு என்பவரின் வீட்டிலும், அதே பகுதியில் உள்ள கிருஷ்ணநாராயணன் என்பவரின் வீட்டிலும் இரு கொள்ளையர்கள் புகுந்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். அடுத்து அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், தங்கள் கைவரிசையைக்காட்ட முயலும்போது, அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துள்ளனர். உடனே அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு, அந்த மர்மக் கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக துரத்திச் சென்றுள்ளனர்.
உஷாரான இரண்டு கொள்ளையர்களும் பொதுமக்களிடமிருந்து தப்பிக்க தலைதெறிக்க ஓடியுள்ளனர். சிறிது தூரத்தில் அவர்கள் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். பொதுமக்கள் கொள்ளையர்களைத்துரத்திச் சென்றதால் அவர்கள் கொள்ளையடித்திருந்த பணம், நகை ஆகியவற்றை வீதியில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து போலீசாருக்கு அளித்ததகவலின் அடிப்படையில், விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொள்ளை நடந்த வீடு மற்றும் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும், கொள்ளையர்கள் விட்டுச் சென்ற கைப்பையை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தபோது அதன் உள்ளே ஒன்றரை லட்சம் பணம் மற்றும் நகை ஆகியவை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இவை வீடுகளில் கொள்ளையடித்த பணமாக இருக்கலாம் என போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த மர்ம நபர்களைத்தீவிரமாக தேடிவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)