ADVERTISEMENT

குறிவைக்கப்படும் அரசியல் பிரமுகர்கள்; ஒரே பாணியில் நடக்கும் கொலைகள்!

11:34 AM Mar 01, 2024 | mathi23

அன்பரசு
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் வேங்கடமங்கலம் முன்னாள் அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இவரது மகன் அன்பரசு (28). இவர் வேங்கடமங்கலம் 9வது வார்டு ஊராட்சி மன்றக் கவுன்சிலராகவும், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க இளைஞர் பாசறை செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.

ADVERTISEMENT

அன்பரசு, கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி கீரப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அன்பரசு வந்த காரை மறித்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை கார் மீது வீசினர். இதில் காயமடைந்த அன்பரசு மற்றும் அவரது நண்பர்கள் காரில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பிச் சென்றனர். அப்போது, அந்த கும்பல் அன்பரசுவை மட்டும் விடாமல் துரத்திச் சென்று அரிவாளை கொண்டு அவரை சரமாரியாக வெட்டினர். இதில் அன்பரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி, அந்த மர்ம கும்பலை தேடி பிடித்து கைது செய்தனர். அ.தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவரின் மகனும், வேங்கடமங்கலம் 9வது வார்டு ஊராட்சி மன்ற கவுன்சிலருமான அன்பரசுவை வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், வேங்கடமங்கலம் அ.தி.மு.க ஊராட்சி மன்ற கவுன்சிலர் அன்பரசுவை கொலை செய்ததைப் போலவே, காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளர் ஒருவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆராமுதன்
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளராக ஆராமுதன் என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். இவர், வண்டலூர் மேம்பாலம் கீழ்ப்பகுதியில் கட்சி அலுவலகம் நடத்தி வந்தார். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (01-03-24) வண்டலூர் மேம்பாலம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட இருந்தது. இந்த பேருந்து நிலையப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக நேற்று (29-02-24) ஆராமுதன் தனது காரில் அப்பகுதிக்கு வந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், திடீரென ஆராமுதன் வந்த கார் மீது வெடிகுண்டை வீசினர். இதில், காரின் முன் பக்கம் கண்ணாடி முழுவதுமாக உடைந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த ஆராமுதன், தனது காரில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். அப்போது, அந்த மர்ம கும்பல், தாங்கள் வைத்திருந்த அரிவாளை கொண்டு, ஆராமுதனை ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில், அவரது இரு கைகளும் துண்டாகியும், உடலில் உள்ள பல்வேறு இடங்களில் படுகாயமடைந்தும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனையடுத்து, அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

இதனை தொடர்ந்து, அப்பகுதியில் இருந்தவர்கள், ஆராமுதனை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆராமுதனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர், ஆராமுதன் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆராமுதனை கொலை செய்து தப்பி ஓடிய மர்ம கும்பலைப் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, இதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் இதே போன்று கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், திமுக பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT