ADVERTISEMENT

‘தமிழ்மொழியில் பேசவும், எழுதவும் முடியாத தமிழர்கள் வந்துள்ளீர்கள்..’ – தமிழியக்கம் விழாவில் துணை முதல்வர் பேச்சு

05:42 PM Oct 16, 2018 | raja@nakkheeran.in

ADVERTISEMENT

உலகம் முழுவதும் உள்ள தமிழர் மற்றும் தமிழ் அமைப்புகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதற்கான தமிழியக்கம் என்கிற ஒருங்கிணைந்த அமைப்பின் தொடக்க விழா சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அக்டோபர் 15ந்தேதி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தீந்தமிழ் திறவுகோல் என்ற நூலினை தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னிர் செல்வம் வெளியிட்டார். மாநில தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தமிழியக்கம் வலைத்தளத்தை தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் தமிழியக்க நிறுவன தலைவரும் விஐடி வேந்தருமான ஜி.விசுவநாதன் தலைமை வகித்து பேசியபோது, 1916 ம் ஆண்டில் மறைமலையடிகள் தலைமையில் தமிழ்மொழி இயக்கம் தொடங்கப்பட்டது. 101ஆண்டுகள் கழித்து சாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் உள்ள தமிழர்களையும், தமிழ் அமைப்புகளையும் ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வரும் வகையில் இந்த தமிழியக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 2007 ம் ஆண்டில் ஐரோப்பா யூனியன் நிகழ்ச்சியில் பங்கேற்ற டாக்டர் அப்துல் கலாம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கவிஞர் கலியன் பூங்குன்றனார் பாடலை குறிப்பிட்டு உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று என்றும் உலகமயமாக்கல் பற்றி மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடியுள்ளார். நமது தாய்மொழியான தமிழ்மொழியின் முக்கியத்துவத்தை தமிழ்மக்கள் அறியாமல் உள்ளனர். உலகில் மூத்த மொழிகளாக 7 மொழிகள் உள்ளன. அதில் ஐரோப்பாவில் கிரேக்கமும் லத்தினும், மேற்கு ஆசியாவில் பாரசீகம் இபுரூ, இந்தியாவில் தமிழ் மற்றும் சமஸ்கிரதம், சீனாவின் சீன மொழிகளாகும். இவற்றில் பலமொழிகள் எழுத்து வடிவிலும் பேச்சு வடிவிலும் இல்லை. மாறாமல் இன்றும் வழக்கத்தில் இருப்பது தமிழ்மொழியும், சீன மொழி மட்டுமே, இவற்றில் மூத்தமொழி தமிழ்மொழியாகும். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழியில் இலக்கணம், இலக்கியம் உருவாகியது, தொல்காப்பியம் என்ற தமிழ்நூல் இலக்கண வடிவில் எழுதப்பட்டது.

அப்படிப்பட்ட தமிழ் மொழியினை தமிழர்கள் மறந்து விடுவார்களோ என்ற நிலை உருவாகியுள்ளது. படித்தவர்களே ஆங்கிலம் கலக்காமல் தமிழ்மொழியில் பேசாத நிலை உள்ளது. முன்பெல்லாம் ஒருவர் பேசும் மொழியை வைத்தே அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை அறிய முடியும், ஆனால் தமிழரை அப்படி கண்டுபிடிக்க முடியவில்லை. வேறுமொழிக்கு நாம் விரோதிகள் அல்ல. மக்களிடையே, மாணவர்களிடையே, ஒவ்வொரு குடும்பத்தினரிடையே இந்த இயக்கம் சென்று சேரவேண்டும் நமது தமிழ்மொழியை பாதுகாக்கவும் தமிழை பரப்பவும் தொடங்கப்பட்டது தான் இந்த தமிழியக்கம். இந்த பணியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தமிழர்களும் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

அவரை தொடர்ந்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் பேசும்போது, சிறந்த கல்வியாளர்கள் மக்களுக்கு தொண்டாற்றுபவர்களை தமிழியக்கம் மூலமாக சந்திப்பதில் மகிழ்ச்சியாகவுள்ளது. இயக்கத்தின் தலைவரும் விஐடி வேந்தருமான விசுவநாதன் பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் அன்பை பெற்று எம்எல்ஏ, எம்பி, அமைச்சர் பொறுப்புக்கள் மூலமாக மக்கள் பணியாற்றியவர். இவ்வுலகில் உள்ள தமிழ் மக்களை ஒருக்குடையின் கீழ் இணைக்க கட்சி பாகுபாடின்றி உருவாக்கப்பட்டுள்ள இந்த தொண்டானது தமிழ் ஆர்வத்திற்கு பெரிதும் உதவும். தமிழ் மொழி ஒழுக்க நெறிகள் பண்பாட்டு நிலைகளை எடுத்து காட்டும் மொழியாகும். உலகில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளது. இதில் இந்தியாவில் சுமார் 1580 மொழிகள் உள்ளன. இவற்றில் தொண்மையான மொழியாக திராவிட மொழி விளங்குகிறது. திராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது, திராவிட குடும்பத்தின் முதல்மொழி தமிழ்மொழியாகும். பழமையான தமிழ் மொழி இன்னும் மாறாமல் விளங்குகிறது. ஒரு தலைமை மொழிக்கு உரிய தாய்மை வடிவம் பண்பாடு கலையறிவு மெற்ற மொழிதான் தமிழ்மொழி. அத்தகைய தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி பெருமை சேர்த்தனர்.

தமிழர்களாக இருந்தும் தமிழ் மொழியில் பேச முடியாமல் எழுதமுடியாமல் உள்ள உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தமிழர்கள் வந்துள்ளனர். அவர்கள் தமிழ் மொழி பேசவும் எழுதவும் தமிழியக்கம் உறுதுனையாக இருக்கும் என்று கருதுகிறேன். விசுவநாதன் எடுத்துள்ள இந்த முயற்சி உலகில் யாரும் எடுக்க முடியாத முதல் முயற்சியாக இருக்கும் என்று கருதுகிறேன். இந்த அமைப்பு எப்படிபட்ட சுனாமி புயல் வந்தாலும் அசைக்க முடியாத அமைப்பாக உருவாகியுள்ளது. நிகழ்ச்சியின் மூலமாக விடுவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை தமிழக அரசு சட்டமாக இயற்றி அதனை நிறைவேற்றும். தமிழியக்கம் என்ற விதை விதைக்கப்பட்டுள்ளது இது செடியாகி மரமாகி ஆலவிருட்சமாக விளங்கி மக்களுக்கு பயனாற்றும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மொரிசீயஸ் நாட்டின் ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி, கயானா நாட்டின் தலைமை அமைச்சர் மோசசு வீராசாமி நாகமுத்து, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திமுக பொது செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், மதிமுக பொது செயலாளர் வை.கோ, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் போன்றோர் கலந்துக்கொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழியக்க தீர்மானங்கள்.

1, தமிகத்தில் தொடக்கப் பள்ளி முதல் முதல் பல்கலைக்கழகம் வரை தமிழை ஒரு பாடமாக மாணவர்கள் படித்தே ஆக வேண்டும் என்னும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்என்று தமிழியக்கம் வேண்டுகிறது.

2, உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதியரசர்கள் பொறுப்பேற்கும்போது தேவநாகரிக எழுத்துருவில் ஒப்பமிட வேண்டும் என்னும் நடைமுறைக்கு மாற்றாக அவரவர் தாய்மொழிலேயே கையொப்பமிடலாம் என்னும் விதியை மைய அரசு நடைமுறைப் படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தையும் மைய அரசையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

3. உரிய வேலை வாய்ப்பின்மை காரணமாக தமிழ் இலக்கியம் பட்டம் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவதால் தமிழ் இலக்கிய பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க ஆவன செய்யுமாறு தமிழக அரசை கோப்படுகிறது.

4, தமிழகத்திலிருந்து புறப்படும் மற்றும் தமிழகத்திற்கு வரும் வானூர்திகளிலும் தமிழகத்திலுள்ள வானூர்தி நிலையங்களிலும் தமிழிலும் அறிவிப்பு செய்திட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT