கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சீலை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களுக்குப் பின் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தலைமை அலுவலகத்தின் சாவியைஇபிஎஸ் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இன்று அதிமுக தலைமை அலுவலகம் திறக்கப்பட இருக்கிறது. மயிலாப்பூர் கோட்டாட்சியர் சீலை அகற்றி சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அலுவலகமேலாளரிடம் ஒப்படைக்கிறார். இன்று சீல் அகற்றப்படுவதால் அதிமுக தலைமை அலுவலகத்திற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.