ADVERTISEMENT

தமிழ்நாட்டை தமிழர்கள்தான் ஆள வேண்டும்! சேலத்தில் ராகுல் காந்தி பேச்சு!!

09:37 AM Apr 13, 2019 | elayaraja

தமிழ்நாட்டை நாக்பூரில் இருந்து ஆள நினைக்கிறது பாஜக; ஆனால் காங்கிரஸ் கட்சியோ, தமிழகத்தை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என்று கருதுகிறது என்று அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சேலத்தில் பேசினார்.

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சேலத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12, 2019) பரப்புரை செய்தார். சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் ஆகிய மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும் சேலத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களை ஆதரித்து ராகுல் காந்தி வாக்கு சேகரித்தார்.

ADVERTISEMENT

பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது:

வரும் மக்களவை தேர்தல் இரண்டு சிந்தனைகளுக்கு இடையேயான போட்டியாகத்தான் இருக்கிறது. பாஜக, ஒற்றை நாடு, ஒற்றை பண்பாடு, ஒற்றை கலாச்சாரம், ஒரே வரலாறு என்பதை நிறுவ முயன்று வருகிறது. ஒரே கருத்துதான் நாட்டை ஆள வேண்டும் என்று கருதுகிறது. காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்த நாட்டின் மீது பல்வேறு பார்வைகள் உள்ளன. இந்த நாட்டில் நிலவும் பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு சிந்தனைகளை அனுசரித்துப் போகும் நோக்கத்துடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

அவர்களோ (பாஜக), நாக்பூரில் இருந்து தமிழகத்தை ஆள நினைக்கிறார்கள். பிரதமர் அலுவலகமும், அங்குள்ள அதிகாரிகளும்தான் தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சக்திகள் என்கிறார்கள் பாஜகவினர். ஆனால், நாங்களோ (காங்கிரஸ்) தமிழ்நாட்டை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என்று எண்ணுகிறோம். தமிழகத்தின் குரலை நாட்டின் வலிமை மிக்க குரலாக பார்க்கிறோம்.

தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு ஆகியவை பசுமையான இந்தியாரை உருவாக்க பக்கபலமாக இருக்கின்றன. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் நாங்கள் கூட்டணியாக இணைந்து பணியாற்றுகிறோம். காங்கிரஸ், எப்போதுமே அதிகாரப்பரவலை விரும்பும் கட்சியாக இருந்து வந்திருக்கிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தந்தை கலைஞர் இறந்தபோது, அவர் பெரிதும் அவமானப்படுத்தப்பட்டதாக இங்கே சொன்னார். தந்தையை இழந்த ஒரு மகனின் உணர்ச்சியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் உங்கள் தந்தை, கட்சித் தலைவர் மட்டுமல்ல; அவர் தமிழர்களின் குரலை உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்து இருந்தார்.

திமுக, காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் குறிப்பிட்டுப் பேசினார். இந்த தேர்தல் அறிக்கையை நாங்கள் 100 சதவீதம் வெளிப்படை தன்மையுடன் தயாரித்து இருக்கிறோம். ஆனால் பாஜக தேர்தல் அறிக்கை மூடிய அறைக்குள் தயாரிக்கப்பட்டது. தேர்தல் அறிக்கை தயாரிக்கும்போது, நீட் தேர்வால் தமிழகத்தில் அனிதா என்ற திறமையான மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். அதையும் கவனத்தில் கொண்டுதான் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.

நீட் தேர்வு தேவையா இல்லையா? என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிக்கையில் தெரிவித்து இருக்கிறோம். இனியும் ஒரு அனிதா சாவதை நான் விரும்பவில்லை. நாம் கருத்து உரிமையை விரும்புகிறோம். மக்களின் குரலைக் கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்து இருக்கிறோம்.

ஒரு நாள் இரவு 8 மணிக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து விட்டார். அதனால் திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனங்கள் அழிந்துவிட்டன. தமி-ழ்நாட்டில் ஏராளமான உற்பத்திக்கூடங்கள் முடங்கின. சிறுதொழில்கள் முடங்கின. பணமதிப்பிழப்பு செய்வது குறித்து அவர் யாரையாவது அழைத்துக் கேட்டாரா? எந்த ஒரு சிறுதொழில் முனைவோரையாவது அழைத்து கருத்து கேட்டாரா? ஒரு 12 வயது குழந்தையை அழைத்துக் கேட்டிருந்தால்கூட 500, 1000 ரூபாய் நோட்டை மதிப்பிழக்கம் செய்வது தேவையற்றது என்று பதில் சொல்லியிருக்கும்.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அம்பானிக்கும், அதானிக்கும் அள்ளிக் கொடுத்திருக்கிறார் மோடி. நாட்டில் 15 பெரிய பணக்காரர்களுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். ஜந்தர் மந்தரில் கோவணத்துடன் போராடிய விவசாயிகளை அழைத்துப் பேச மறுத்தவர்தான் நரேந்திர மோடி. அவர்களை அ-ழைத்துப்பேச வேண்டும் என்ற நாகரிகம்கூட தெரியாதவர்தான் மோடி.

விவசாயிகளை பார்க்க மறுத்த மோடி, அனில் அம்பானியையும், நீரவ் மோடியையும், விஜய் மல்லையாக்களையும் கட்டித்தழுவுகிறார். ஜிஎஸ்டி என்ற பெயரில் ஐந்து விதமான வரிவிதிப்பை பாஜக கொண்டு வந்திருக்கிறது. 28 சதவீத வரியால் நெசவாளர்கள் நூல் வாங்கக்கூட முடியாமல் திணறுகின்றனர். நெசவு கருவிகள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்

அதனால்தான் நாம் ஒரே வரி, குறைந்த வரி, எளிமையான வரியை கொண்டு வருவோம் என உறுதி அளித்திருக்கிறோம். இதுமட்டுமின்றி நாட்டின் வறுமை ஒழிப்பில் புரட்சிகரமான திட்டத்தையும் வகுத்து இருக்கிறோம். வறுமை மீதான சர்ஜிகல் ஸ்டிரைக் என்றும் சொல்லலாம். இதற்காக 'நியாய்' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நியாய் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 20 சதவீத ஏழைகளுக்கு மாதம் 6000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதாவது, ஐந்து ஆண்டுகளில் ஏழைகளின் வங்கிக் கணக்கில் 3.60 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கும். ஆண்கள் விரும்பாத பட்சத்தில் அவர்கள் வீட்டுப் பெண்களின் வங்கிக்கணக்கில் இத்தொகை செலுத்தப்படும்.

உலகில் வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற புரட்சிகரமான திட்டம் இல்லை. அதேபோல், மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். மத்திய அரசுப்பணிகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும்.

எதற்கெடுத்தாலும் மேக் இன் இந்தியா என்கிறார் மோடி. ஆனால் மொபைல் போன், காலணிகள், சட்டை என எல்லாவற்றிலும் மேட் இன் சைனா என்றே இருக்கிறது. தொழில் தொடங்க வேண்டும் என்றால் எல்லா துறைகளிலும் அனுமதி பெற லஞ்சம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், புதிய தொழில் கொள்கை வகுக்கப்படும். அதன்படி, தொழில்முனைவோர் முதல் மூன்று ஆண்டுகளுக்கு எந்த துறையிலும் அனுமதி கேட்டு காத்திருக்கத் தேவையில்லை. அதன்பிறகு அனுமதி கேட்டு விண்ணப்பித்தால் போதுமானது. அப்போது உதவிகள் கேட்டாலும் வழங்கப்படும்.

நாடு முழுவதும் பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள 22 லட்சம் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். அந்த பணியிடங்களை நிரப்ப மோடி ஆட்சி தவறி விட்டது. இவை தவிர மேலும் பத்து லட்சம் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் ஸ்டாலின் முதல்வராக வேண்டும். ஒத்த கருத்துள்ள ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும் அமைய வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT