ADVERTISEMENT

மழை பாதிப்பு குறித்து பொய் பரப்புரை-  தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை!

10:32 PM Nov 11, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மழை பாதிப்பு குறித்து சமூக வலைதளங்களில் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறையின் அறிவிப்பில், "தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாத்து இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் கொண்டு வர காவல்துறையினர் மற்றும் பிற அரசுத் துறையினர் இரவு, பகல் பாராமல் மீட்புப் பணிகளில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தருணத்தில், சில சமூக விரோதிகள் சமூக வலைதளங்களை தங்களுக்கு சாதகமாக கையிலெடுத்து கொண்டு பொதுமக்களிடையே மழை, வெள்ளம் குறித்து அச்சத்தையும், பீதியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தும் வகையில் காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்து பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கடந்த காலங்களில் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் நடைபெற்ற வெள்ள பாதிப்புகளை தற்போது நடைபெற்றது போன்று சித்தரித்து, பின்னணி குரல் பதிவுடன் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு, பொதுமக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்த முனைந்துள்ளது காவல்துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.

சமூக வலைதளங்களைப் பயனுள்ள வகையில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வரும் நிலையில், சிலர் அரசு நிர்வாகத்திற்கு அவப்பெயர் உருவாக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக இதுபோன்று அவதூறான கருத்துக்களைத் திட்டமிட்டு பரப்பி வருவது சட்டப்படி குற்றமாகும்.

எனவே, இவ்வாறு சமூக பொறுப்பின்றி உண்மைக்குப் புறம்பான இடுகைகளைப் பதிவிடுவோர் எவராயினும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், அவர்களது வலைதளக் கணக்குகளை முடக்கவும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை கடுமையாக எச்சரிக்கிறது." இவ்வாறு தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT