ADVERTISEMENT

கடந்த ஓராண்டாக பொதுப்பணித்துறை என்ன செய்தது என்பதை சொல்ல வேண்டும்- கொ.நா.ம.தே.க பொது செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை!

04:20 PM Jul 08, 2019 | Anonymous (not verified)


"காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற கனமழை காவிரியில் வெள்ளமாக வந்தால் சேமித்து வைக்க தமிழகம் என்ன ஏற்பாடுகளை செய்திருக்கிறது." என மாநில எடப்பாடி அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ER ஈஸ்வரன் மேலும் கூறும் போது, "கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்ற செய்திகள் வருகிறது. எதிர்வரும் நாட்களில் மழைப் பொழிவு அதிகமாகும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் கர்நாடக அணைகள் நிரம்பி காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட வாய்ப்பு இருக்கிறது. ஓராண்டுக்கு முன்னால் வந்தது போல காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடவும் வாய்ப்பிருக்கிறது. கர்நாடக அரசை தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஒருபுறம் போராடுகிறோம். மழை வர வேண்டுமென்று ஒரு பக்கம் பூஜைகள் நடத்துகின்றோம். ஆனால் இப்போது காவிரியில் உபரிநீர் வந்தால் அதை கடலில் கலக்காமல் சேமித்து வைப்பதற்கு என்ன ஏற்பாடுகளை தமிழகம் செய்திருக்கிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்ற முறை காவிரியில் உபரிநீர் வந்து கடலில் கலந்து ஒரு வருடத்தை தாண்டிவிட்டது. இந்த ஓராண்டு காலத்தில் திரும்பவும் அந்த நிலை வந்தால் கடலில் கலக்காமல் உபரிநீரை எப்படி சேமிக்கலாம் என்பதற்காக என்ன ஏற்பாடுகளை தமிழக பொதுப்பணித்துறை செய்திருக்கிறது. இதை கண்டிப்பாக தமிழக மக்கள் தெரிந்துக்கொள்ள விரும்புகிறார்கள். தமிழக பொதுப்பணித்துறையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இதை தெளிவுப்படுத்த வேண்டும். தமிழக பொதுப்பணித்துறை செயல்படாததற்கு தமிழக மக்கள் பாதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. எனவே தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த ஓராண்டில் தாங்கள் என்ன செய்தோம் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்." என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT