
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையின்படி காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு காவிரியில் 15 நாட்களுக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனை தொடர்ந்து அன்றைய தினமே காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினித் குப்தா, காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் ஆகியோர் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தனர்.
அதனை தொடர்ந்து மத்திய அரசின் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தபடி டெல்லியில் நேற்று (19.09.2023) சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்கிட மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவினை வழங்கி இருந்தனர்.
இந்த நிலையில் கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் மனுதாக்கல் செய்ய மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, பி.கே. மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு சார்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது. ஆனால், கர்நாடக அரசு சார்பில் குடிநீர் பிரச்சினை நீர்ப்பற்றாக்குறை இருப்பதால் உத்தரவைப் பின்பற்ற இயலாது; 2 ஆயிரம் கன அடிநீர் மட்டுமே திறந்து விட முடியும் என்று வாதிடப்பட்டது. இதனைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகள் அமல்படுத்தப்பட வேண்டும். காவிரி மேலாண்மை ஆணைய மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகள் மற்றும் பரிந்துரைகளை ஏற்க முடியாது என கூற முடியாது” என்று கூறியுள்ளது. மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.