ADVERTISEMENT

'முதல்வராக ஸ்டாலின் இருக்கும் வரை தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கும்'- அமைச்சர் ஐ. பெரியசாமி பேட்டி

09:50 PM Sep 07, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல்லில் உணவுப் பொருட்கள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக தேசிய நுகர்வோர் தினம் மற்றும் நுகர்வோர் உரிமைகள் தின மாநில அளவிலான விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுப் போட்டி, கவிதை போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், சான்றிதழ், ரொக்க பரிசு வழங்கினார்கள்.

மேலும் நியாய விலைக் கடைகளில் சிறப்பாக பணியாற்றிய விற்பனையாளர்கள், எடையாளர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சுய உதவிக் குழுக்களின் 2,182 பயனாளிகளுக்கு 14 கோடியே 57 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் பூஜா குல்கர்னி, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜெகநாதன் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதன் பின் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''மக்களுக்கு தேவையான உணவு, கல்வி போன்ற திட்டங்களை கொண்டு சேர்ப்பது குறித்து முதல்வர் பயணம் இருக்கிறது. 24 மணி நேரமும் மக்களைப் பற்றி சிந்தித்து கொண்டு இருக்கிறார் தமிழக முதல்வர். அவருடைய சிறப்பான பயணம் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. எதுவும் தடுக்க முடியாது. எவ்வளவு பெரிய சக்தி வந்தாலும் அரசு மக்களுக்கு கொண்டு செல்லக்கூடிய திட்டங்களைத் தடுக்க முடியாது. இந்த நாட்டில் 120 கோடி மக்களில் சாதாரண குடிமகனாக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும் அனைவரும் சட்டத்திற்கு முன் சமம். யாரு வேண்டுமானாலும் பேசலாம். சுதந்திரமாக பேசுவதற்கு உரிமை உள்ளது. கருத்து சுதந்திரம் இருக்க கூடிய கட்சி ஒன்று இருக்கிறது என்றால் அது திமுக தான். எங்களைப் பொறுத்தவரை கொள்கை லட்சியத்தில் உறுதியாக உள்ளோம். எல்லா ஜாதியும் எல்லா மதமும் ஒற்றுமையாக வாழ்கிறோம். எந்தக் கலவரமும் தமிழ்நாட்டில் வராது. இந்தியாவில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக தான் இருக்கும். முதல்வர் ஸ்டாலின் இருக்கும் வரை தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கும். சட்டம் ஒழுங்கு எல்லோருக்கும் சமமாக பங்கிடப்படும். குடும்பத் தலைவிகளுக்கு இன்னும் ஏழு நாட்களில் மாத உதவித் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. தமிழக முதல்வர் சொன்ன வாக்குறுதிகள் நூறு சதவீதம் நிறைவேற்றியுள்ளார்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT