
தேனி மாவட்டத்தில் உள்ள தேனி பங்களாமேடு பகுதியில் ‘உரிமையை மீட்க ஸ்டாலின் குரல்’ பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, “வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர் யாரைக் கைகாட்டுகிறாரோ அவர்தான் இந்தியாவின் பிரதமர். ஒன்றியத்தை ஆளக்கூடிய பா.ஜ.க. அரசு, தமிழகத்திற்கு தரவேண்டிய நிவாரணத் தொகை ஒரு பைசாகூட தரவில்லை. தமிழகத்திலிருந்து ஒன்றிய அரசுக்கு செல்லக்கூடிய பெரும் அளவு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து குறைந்த அளவு தொகை மீண்டும் தமிழகத்திற்கு திருப்பித் தரப்படுகிறது. ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டமிட்டு தமிழகத்திற்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை தராமல் வஞ்சித்து வருகிறார்” என்று கூறினார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில், தேனி நாடாளுமன்றத் தொகுதியான சோழவந்தான், உசிலம்பட்டி, கம்பம், போடி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகியவற்றின் பிரச்சாரத்தின் தொடக்கமாக நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் தேனி தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், தேனி தெற்கு மாவட்டத் தி.மு.க. செயலாளரும் கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன் மற்றும் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே.எஸ். சரவணக்குமார், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், தேர்தல் பொறுப்பாளர்கள், கட்சிப் பொறுப்பாளர்களுடன் பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.