ADVERTISEMENT

‘பெண் ஊழியர்களுக்கு மனச் சித்ரவதைகள்’ - கிராம வங்கி மண்டல மேலாளர் மீது குற்றச்சாட்டு!   

02:50 PM Feb 17, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

கந்தசாமி

ADVERTISEMENT

“பெண்கள் எவ்வளவு முன்னேறி இருக்கிறார்களோ; அதை வைத்தே ஒரு சமூகம் எவ்வளவு முன்னேறி இருக்கிறது என்பதை நான் அளவிடுவேன் என்றார் அம்பேத்கர். தமிழ்நாடு கிராம வங்கியோ, பெண் பணியாளர்களை அவமரியாதையாக நடத்துகிறது. வங்கியில் பணிபுரியும் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்; மிரட்டப்படுகிறார்கள்; வீட்டுக்குச் சென்றால் தூங்க முடிவதில்லை. மனச் சித்ரவதைகள் மூலம் எங்களைப் போன்ற பெண் ஊழியர்களைப் பைத்தியமாக்கி விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது.” - தமிழ்நாடு கிராம வங்கியின் தலைவருக்கும், மாநில மகளிர் ஆணையத்துக்கும், மாநில மனித உரிமை ஆணையத்துக்கும் விருதுநகர் மண்டல மேலாளர் கந்தசாமி குறித்து பெண் ஊழியர்கள் இருவர் எழுதிய புகாரில் இடம்பெற்ற வாசகங்கள் இவை.

பெண் ஊழியர் விரோத நடவடிக்கையை விருதுநகர் மண்டல மேலாளர் கந்தசாமி தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகத் தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியனும், தமிழ்நாடு கிராம வங்கி ஆபீஸர்ஸ் யூனியனும் அந்த வங்கியின் தலைவருக்கு புகார்கள் அனுப்பி, நடவடிக்கை எடுக்காத நிலையில், தமிழ்நாடு கிராம வங்கியின் விருதுநகர் மண்டல அலுவலகம் முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், சிஐடியூவின் உழைக்கும் மகளிர் குழுவினருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதியும் பங்கேற்றுள்ளார்.

மண்டல மேலாளர் கந்தசாமி மீதான குற்றச்சாட்டுகள் சிலவற்றைப் பார்ப்போம்:

பெண் ஊழியர் ஒருவர் மருத்துவ விடுப்பு கேட்டபோது “நாய்க்கு கூடத்தான் உடம்பு சரியில்லாம இருக்கு. அதுவே சரியாகுறது இல்லையா? உங்களுக்கு என்னம்மா?” என்று கமென்ட் அடித்தார். “பெண் ஊழியர்கள்கிட்ட ஆக்கத்திறன் (productivity) இல்ல. அவங்களால வங்கிப் பணம் வீணாகுது. வங்கி நிர்வாகத்திடம் கிளைகளில் பெண் ஊழியர்களை வேலைக்குப் போடாதீங்கன்னு சொன்னாலும் அவங்களுக்கு புரியுறதில்ல.” எனப் புலம்புகிறார். பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவரை கிளை மேலாளருடன் சேர்ந்துகொண்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால் அவருக்கு இரண்டு முறை அபார்ஷன் ஆனது. தங்களோடு பணிபுரிந்த ஒரு ஆண் மேலாளருக்கு இன்னொரு பெண் மேலாளர் பணி ஓய்வு விழா நடத்த முயன்றபோது ‘குறுநில மன்னர்களுக்கு பிரிவு விபச்சார விழா’ என்று கிண்டலடித்து சங்கத்தின் வாட்ஸ்-ஆப் குரூப்பில் மெசேஜ் அனுப்பினார். ஒரு குறுநில மன்னரைக் குஷிப்படுத்த அனேக வழிகள் இருக்கின்றன. அதைத் தனியாகக் கையாண்டிருக்கலாம் என்று அந்தக் குறுந் தகவலில் விழா நடத்திய பெண் மேலாளரைக் கொச்சைப்படுத்தினார்.

தன் மீதான குற்றச்சாட்டுக்கு மண்டல மேலாளர் கந்தசாமி அளித்த பதில்:

விருதுநகர் மண்டல மேலாளர் கந்தசாமியிடம் ‘குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டு சங்கத்தினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துமளவுக்கு பெண் ஊழியர்களைக் கொடுமைப் படுத்துகின்றீர்களா?’ எனக் கேட்டோம். “அந்த வாட்ஸ்-ஆப் மெசேஜ் விவகாரம் 2018ல நடந்தது. அந்தப் பழைய கதைய இப்ப உள்ளே இழுத்துவிடறாங்க. அப்ப நான் மண்டல மேலாளர் கிடையாது. கிளை மேலாளரா இருந்தேன். பணி ஓய்வு விழா நடத்துறோம்னு சொல்லி கட்டாய வசூல் வேட்டை நடத்துனாங்க. உறுப்பினர்களை மிரட்டி பணம் வாங்கலாமா? அது கையூட்டு அல்லவா? அப்ப நானும் தொழிற்சங்கத்துல இருந்தேன். அதனால தவறைச் சுட்டிக்காட்டி மெசேஜ் போட்டேன். என்னோட மண்டலத்துல விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் இருக்கு. 78 கிளைகள் இருக்கு. நிரந்தரப் பணியாளர்களா 320 பேர் வேலை பாக்குறாங்க. தினக்கூலிகள், அப்ரைசர்னு எல்லாரையும் சேர்த்து மொத்தம் 500 பேர் இருக்காங்க. இந்த மண்டலத்துல வேலை பார்க்கிற 500 பேர்ல என்னை எதிர்க்கிறவங்க... மிஞ்சி மிஞ்சிப் போனா அஞ்சு பேர்தான் இருப்பாங்க. அவங்க, அவங்க கடமையை ஒழுங்கா செய்யாதவங்க.

எத்தனை லட்சம் பேர் படிச்சிட்டு வேலை இல்லாம திரியிறாங்க. அப்படியே வேலை கிடைச்சாலும் நைட்டும் பகலுமா வேலை வாங்கிட்டு எட்டாயிரமோ பத்தாயிரமோதான் சம்பளம் தர்றாங்க. ஆனா.. வங்கியில் வேலைக்குச் சேரும்போதே 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைச்சிருது. இவ்வளவு சம்பளம் வாங்குறவங்க பொறுப்பை உணர்ந்து வேலை செய்யணும்ல? இது கிராம வங்கி. இங்கே வர்றவங்க சாதாரண ஏழை எளிய மக்கள். இந்த மக்கள்கிட்ட கொஞ்சம் இறங்கி கனிவா நடந்துக்கலாம்ல. 3 மணிக்கு மேல வந்தா அதைச் செய்யமாட்டேன், இதைச் செய்யமாட்டேன்னு சொல்லலாமா? இந்த மாதிரி பண்ணாதீங்கன்னு எடுத்துச் சொல்லுறோம். இந்த மண்டலத்துல எல்லாரும் நல்லாத்தான் வேலை பார்க்கிறாங்க. ஒரு நாலஞ்சு பேரைத் தவிர. பணியில் தவறு நடந்தால் நான் கண்டிப்பு காட்டுவேன். எங்கெங்கே ஒழுக்கக்கேடு நடக்குதுன்னு பார்க்க வேண்டியது ஒரு மண்டல மேலாளரோட பணி. அதைத்தான் பண்ணிட்டு இருக்கேன். இதுதான் சிலருக்கு இடைஞ்சலா இருக்கு. எனக்கெதிரான புகார்கள், இந்த ஆர்ப்பாட்டம் எல்லாமே பாலிடிக்ஸ்.” என்று விரிவாக விளக்கம் அளித்தார்.

தமிழ்நாடு கிராம வங்கியின் தலைவர் செல்வராஜை தொடர்புகொண்டோம். “ஆமா... ரெண்டு ஸ்டாஃப்கிட்ட இருந்து கம்ப்ளைண்ட் வந்திருக்கு. கம்ப்ளைண்ட விசாரிப்போம். என்ன நடவடிக்கை எடுக்கணுமோ எடுப்போம். இது வழக்கமான வங்கி நடைமுறைதான். இதுக்கெல்லாம் ரூல்ஸ் இருக்கு.” என்று சிம்ப்பிளாக முடித்துக்கொண்டார். உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்களின் பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT