ADVERTISEMENT

“தமிழக வெள்ள பாதிப்புக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும்” - பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை

01:20 PM Jan 02, 2024 | mathi23

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் ரூ.1112 கோடியில் உருவாக்கப்பட்டது. இதனை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் ரூ.20 ஆயிரம் கோடி திட்டங்களைத் தொடங்கி வைத்தல், மற்றும் அடிக்கல் நாட்டுவிழா இன்று மதியம் விமான நிலைய வளாகத்தில் நடந்தது.

ADVERTISEMENT

இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய முனையத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக அவருக்கு முதல்வர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தார். அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் முருகன் வரவேற்று பேசினார். முன்னதாக பிரதமர் மோடிக்கு, விமான முனையத்தின் சிறப்புகளை விமான மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா விளக்கி கூறினார். மேலும், புதிய முனையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகனங்கள் நிறுத்தும் வசதி, உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் குறித்தும் ஜோதிராதித்யா விழாவில் பேசினார். சாமானியர்களும் விமானத்தில் செல்ல வேண்டும் என்பதே பிரதமரின் இலக்கு என்றும் அவர் கூறினார்.

ADVERTISEMENT

இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, “இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது. தொட்ட துறைகள் அனைத்திலும் தமிழ்நாடு சிகரத்தை தொட்டு வருகிறது. விமான நிலையங்களை விரிவாக்கம், மற்றும் நவீனபடுத்த தமிழ்நாடு அரசு நிலம் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விமான நிலையத்தை விரைவில் விரிவாக்கம் செய்ய வேண்டும்.

தென் தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் ஆன்மீக பயணமாக வருகிறார்கள். அதே போன்று வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாவிற்காகவும் அங்கு வருகிறார்கள். அவர்கள் ஏதுவாக வரவேண்டும் என்பதற்காக மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் வைத்த கோரிக்கை பிரதமர் மோடி பரிசீலிக்க வேண்டும்.

சென்னை- பினாங்கு, சென்னை- டோக்கியோ நகரங்களுக்கு நேரடி விமான போக்குவரத்தை தொடங்க வேண்டும். சமீபத்தில் தென் மாவட்டங்களில் வெள்ளம், அதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை பிரதமர் மோடி அறிந்தது தான். அந்த வெள்ளத்தால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனை இயற்கை பேரிடராக கருதி , தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும். கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டிய கடமை மாநில அரசுகளுக்கு தான் இருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பிரதமர் உதவுவார் என நம்புகிறேன். இது அரசியல் முழக்கம் அல்ல. தமிழகத்தின் கோரிக்கை மக்களுக்கானது” என்று பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT