
ஆரம்ப கட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு திருச்சிக்கும் பெரும்பாலான விமானங்கள் இயக்கப்படவில்லை. அதன்பிறகு துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு மீட்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மேலும், இலங்கைக்கு இயக்கப்பட்டுவந்த விமான சேவை, கடந்த ஆண்டு மார்ச் மாதம்முதல், தொற்று காரணமாக ரத்து செய்யப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, திருச்சியிலிருந்து இயக்கப்பட்டுவந்த இலங்கைக்கான விமான சேவை முடங்கியது. இதனால் திருச்சியிலிருந்து இலங்கை செல்ல முடியாமல் பயணிகள் தவித்துவந்த நிலையில் தற்போது நோய்த் தொற்று குறைந்துவருவதால், இலங்கை - திருச்சி இடையேயான சிறப்பு விமானங்கள் இயங்க துவங்கியுள்ளன. அதுகுறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்து பயணிகளின் முன்பதிவுகளைத் தொடங்கியுள்ளது. அந்த விமானங்கள் அடுத்த மாதம் செப்டம்பர் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் கொழும்புவில் இருந்து புறப்பட்டு காலை 9 மணிக்குத் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்து, இங்கிருந்து மீண்டும் கொழும்புவிற்கு காலை 10 மணிக்குப் புறப்பட்டுச் செல்கிறது.