ADVERTISEMENT

“நொறுங்கிப் போய் உள்ளேன்” - வருத்தத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 

03:27 PM Oct 15, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் சத்யா என்ற மாணவியை காதலித்து வந்த சதீஸ் என்பவர் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் தள்ளி கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது மகளின் மரணம் குறித்த துயரம் தாளாமல் மாணவியின் தந்தை மாணிக்கம் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தமிழகம் முழுவதும் பெரிதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் கல்லூரியில் நடந்த அரசு விழா ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “இன்று இதை சொல்லுகிற போது சிறு வேதனையோடு குறிப்பிட விரும்புகிறேன். சத்யா என்ற மாணவிக்கு ஏற்பட்ட துயரத்தை அறிந்து நொறுங்கிப் போயுள்ளேன். இது போன்ற சம்பவங்கள் இனி தமிழகத்தில் நிகழக்கூடாது. இதுவல்ல நாம் காண விரும்பக்கூடிய சமூகம். இனி எந்த பெண்ணிற்கும் இது போன்று நடக்காமல் தடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தங்கள் பிள்ளைகள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்கள் அறிவாற்றல், தனித்திறமை, சமூக நோக்கம் மற்றும் பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக அவர்களை பெற்றோர்கள் வளர்க்க வேண்டும்.

பாடப்புத்தக கல்வி மட்டும் அல்ல. சமூகக் கல்வி அவசியமானது. தன்னைப் போலவே பிற உயிரையும் மதிக்க பாதுகாக்க கற்றுத்தர வேண்டும். அவர்கள் எந்த நிலையிலும் திசை மாறி சென்றுவிடாதபடி வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோருக்குத்தான் இருக்கிறது. இயற்கையில் ஆண் வலிமையுடையவனாக இருக்கலாம். அந்த வலிமை அடுத்தவர்களை கட்டுப்படுத்துவதாக இருக்கக் கூடாது. பெண்களை பாதுகாக்கக் கூடியதாக அந்த வலிமை இருக்க வேண்டும். சில இளைஞர்கள் எந்த மாதிரியாக வளர்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது” என்று கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT