ADVERTISEMENT

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்; விளையாட்டு வீரர்கள் ஆர்வம்

04:02 PM Feb 09, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 44 வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவின் போது, "ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் கபடி, சிலம்பாட்டம் ஆகிய இரண்டு பாரம்பரிய விளையாட்டுகளுக்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது என அறிவித்தார். மேலும் அவர், மாணவ மாணவிகளுக்கு கல்வி மட்டும் போதாது. கல்வியுடன் சேர்த்து விளையாட்டு அனைவருக்கும் தேவை என்று தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு வயதினருக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கான முக்கியத்துவம் மற்றும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பல பிரிவுகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022-23 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்த ஆணையிடப்பட்டுள்ளது. மண்டல அளவிலான போட்டிகளை நடத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 11 வகையான விளையாட்டுப் போட்டிகளும், கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு 11 வகையான விளையாட்டுப் போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு 5 வகையான விளையாட்டுப் போட்டிகளும், பொதுப்பிரிவினருக்கு 5 வகையான விளையாட்டுப் போட்டிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 8 வகையான விளையாட்டுப் போட்டிகளும் என மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 588 நபர்களுக்கும், ஒவ்வொரு மண்டலத்திலும் 40 நபர்களுக்கும் என மாநிலம் முழுவதும் 71,592 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்குவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 9 லட்ச ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக மூவாயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக இரண்டாயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். மாநில அளவிலான தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

கரூர் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 42 லட்சத்து எட்டாயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகை மட்டும் 15 கோடியே 99 லட்சத்து 4 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில் நேற்று முதலமைச்சர் கோப்பைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் துவங்கப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு இணையதளம் வாயிலாக தனிநபர் விளையாட்டு பிரிவில் மொத்தம் 6451 நபர்களும், குழு விளையாட்டுப் போட்டிகளில் 10000 நபர்களும் மொத்தம் 16451 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பதிவு செய்துள்ளார்கள். கரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை இன்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், விளையாட்டு துறை அதிகாரிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT