
கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் மதுரை காவல்துறை அணி முதல் பரிசை பெற்று சுழற்கோப்பையையும் 15 ஆயிரம் ரொக்கப் பரிசையும் பெற்றது.
கரூர் டெக்ஸ் சிட்டி கூடைப்பந்து கழகம் சார்பில் 5 வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப்போட்டிகளை கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் தமிழகத்தில் உள்ள 14 மாவட்டத்திலிருந்து 24 அணிகள் கலந்து கொண்டன. நாக்-அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளின் இறுதி ஆட்டம் இன்று (29.3.2022) நடைபெற்றது.
இந்த போட்டியில் மதுரை காவல்துறை அணி மற்றும் கரூர் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மதுரை காவல் துறையினர் தொடக்கம் முதலே தொடர்ந்து அதிக புள்ளிகள் எடுத்து முன்னிலை வகித்தனர். இறுதியாக மதுரை காவல்துறை அணி 54 : 36 என்ற புள்ளிகள் கணக்கில் கரூர் அணியை வீழ்த்தி முதல் பரிசை தட்டிச் சென்றது. முதல் பரிசு பெற்ற மதுரை காவல்துறை அணிக்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் சுழற்கோப்பையையும், 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசினை வழங்கினார். இரண்டாவது இடம் பெற்ற கரூர் அணிக்கு சுழற்கோப்பை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.