ADVERTISEMENT

மீன்பிடித் தொழிலிலிருந்தே தமிழர்களை அகற்ற முயற்சிக்கிறது இலங்கை அரசு: வேல்முருகன் கண்டனம்

12:32 PM Oct 22, 2018 | rajavel



மீன்பிடித் தொழிலிலிருந்தே தமிழர்களை அகற்றும், வரலாறு பார்த்திராத கொடூர சட்டத்தைப் போட்டு, அதன்கீழ் தூத்துக்குடி மீனவர் 8 பேருக்கு தண்டனையும் வழங்கியிருக்கிறது இலங்கை அரசு! இதை அதிமுக அரசும் ஒன்றிய பாஜக அரசும் கண்டுகொள்ளாததுடன், சட்டம் போட்ட இலங்கை ஆட்சியாளரை அழைத்து ஆலோசனையும் நடத்துகிறார் மோடி! சர்வதேச மனித உரிமைக் கோட்பாட்டிற்கு எதிராக, தமிழர்களை அழிப்பதற்கென்றே போட்டிருக்கும் இந்தச் சட்டத்தை ரத்து செய்தாக வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

அண்மையில் இந்திய உளவு அமைப்பான ‘ரா’ தன்னைக் கொல்ல சதி செய்கிறது என்று இலங்கை அமைச்சரவைக் கூட்டத்திலேயே அறிவித்தார் அதிபர் சிறிசேனா. அதன்பின் அவரது அலுவலகமே அந்த செய்திக்கு மறுப்பு வெளியிட்டது. இந்த சமயத்திலேயே, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தவுள்ள செய்தியும் வெளியானது.

இதற்கு இரண்டு நாள் முன்னர்தான், தூத்துக்குடி மீனவர் 8 பேருக்கு இலங்கை அரசு 3 மாத சிறை தண்டனையுடன் தலா 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து தமிழக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கண்டனக் குரலை பழனிசாமி அரசும் சரி, மோடி அரசும் சரி, கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில்தான், கடந்த புதன்கிழமையன்று பிரதமர் மோடியும் தன்னைக் கொல்ல இந்திய ‘ரா’ சதி செய்கிறது என்று சொன்ன இலங்கை அதிபர் சிறிசேனாவும் தொலைபேசியில் உறவாடி, அதன்பின் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 3 நாள் பயணமாக இந்தியா வந்தார். நேற்று டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் மோடி-ரணில் ஆலோசனை நடந்தது. இரு தரப்பு உறவை வலுப்படுத்த பேச்சு நடத்தினர் என்று செய்தி வெளியானது.

ஏற்கனவே இரு நாட்டுக்கும் இடையே நல்லுறவு இருக்கும் நிலையிலும், தமிழக மீனவர்களுக்கெதிராக இலங்கை சட்டம் போட்டிருக்கிறது; உறவை மேலும் வலுப்படுத்துவதென்றால், தமிழக மீனவர்களை அடியோடு அழித்தொழித்துவிடவா என்று கேட்க விரும்புகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

தமிழக மீனவர்களை தமிழர் கடலிலிருந்தே அப்புறப்படுத்துவற்கான தொடக்கம்தான் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தது என்பது இன்று நிரூபணமாகிறது. மக்களவைத் தேர்தலின்போது கச்சத்தீவை மீட்பதாகச் சொன்ன பாஜகதான், கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தம் என்று பிரமாணப் பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அன்றிலிருந்து தமிழக மீனவர்களை தொழில் செய்யவிடாமல் இலங்கை கடற்படை விரட்டியடிப்பது தொடர்கிறது.

இப்போது 10.10.2018ல் இலங்கை மீன் வளத்துறை 1959/1979ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்து, ஐநா மனித உரிமைக் கோட்பாட்டிற்கே எதிரான, மனித குலம் இதுவரை பார்த்திராத கொடிய அழித்தொழிப்புச் சட்டத்தை அரங்கேற்றியிருக்கிறது.

அந்தச் சட்டத்தை, கடந்த ஆகஸ்ட் 18ந் தேதியே கைது செய்த தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் மீது பாய்ச்சியிருக்கிறது. படகுகளையும் பறிமுதல் செய்து, தலா 60 லட்சம் ரூபாய் அபராதமும் 3 மாத சிறை தண்டனையையும் அளித்துள்ளது இலங்கை நீதிமன்றம்.

இந்தச் சட்டத்தின்படி 15 மீட்டர் நீள படகிற்கு இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ. 50 லட்சமும், 15 முதல் 24 மீட்டர் நீள படகிற்கு ரூ. 2 கோடியும், 24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீள படகிற்கு ரூ. 10 கோடியும், 45 முதல் 75 மீட்டர் நீள படகிற்கு ரூ.15 கோடியும், 75 மீட்டருக்கு அதிகமுள்ள படகிற்கு ரூ.17.5 கோடியும் அபராதம் விதிக்கப்படும். படகின் உரிமையாளர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, வழக்கு ஒரு மாதத்திற்குள் முடித்துவைக்கப்படும். என்னே கொடுமை!

இந்தக் காட்டுமிராண்டிச் சட்டம் குறித்து அதிமுக பழனிசாமி அரசும் சரி, ஒன்றிய பாஜக மோடி அரசும் சரி, ஆட்சேபனையே தெரிவிக்கவில்லை; ஏன், கண்டுகொள்ளக்கூட இல்லை.

இதிலிருந்து தெரிவது என்ன? இலங்கையின் கொடூர சட்டத்திற்கு இவர்களும் உடந்தை என்பதுதான். தன்னைக் கொல்ல இந்திய ‘ரா’ சதி செய்கிறது என்று சொன்ன இலங்கை அதிபர் சிறிசேனாவுடனேயே மோடி தொலைபேசியில் உறவாடுகிறார்; இலங்கைப் பிரதமர் ரணில் இந்தியா வந்து, இரு தரப்பு உறவை வலுப்படுத்தப் பேச்சு நடத்துகிறார் என்றால் இதை எப்படிப் புரிந்துகொளவது?

இலங்கை அரசின் இந்தக் கொடூர அழிமாட்டச் சட்டம் சர்வதேச மனித உரிமைக் கோட்பாட்டுக்கே புறம்பானது. ஆகவே இது உலகளாவிய பிரச்சனை. இந்தச் சட்டத்தைச் செய்தவர்களையும் இதற்குத் துணை செய்தவர்களையும் குற்றவாளிகளாக உலக அரங்கில் நிச்சயம் தமிழர்கள் நிறுத்துவார்கள். அதற்கு முன் செய்த பிழை உணர்ந்து அதனை நீக்கிக்கொள்வது அவர்களின் கடமை.

எனவே, தமிழர்களை மீன்பிடித் தொழிலிலிருந்து அகற்றுவது மட்டுமல்ல, அவர்களை அழித்தொழிப்பதற்கென்றே போட்டிருக்கும் இந்தச் சட்டத்தை ரத்து செய்தாக வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT