Skip to main content

வெளிநாடு வாழ் தமிழர்களை தாயகம் அழைத்துவரக்கோரி போராட்டம்! வேல்முருகன் அறிவிப்பு

t. velmurugan tvk

 

 

வெளிநாடு வாழ் தமிழர்களை உடனடியாக தாயகம் அழைத்து வர வலியுறுத்தி நாளை (05.07.2020) காலை 10 மணியளவில் தமிழ்நாடு முழுவதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சமூக இடைவெளியை பின்பற்றி தங்களது இல்லங்களில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தை நடத்துவார்கள் என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது தமிழ்ச் சொலவடை. அதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது சின்னஞ்சிறு நாடான கியூபா. அமெரிக்கா போன்ற உலகின் மாபெரும் நாடுகளே கரோனாவை எதிர்கொள்வதில் மண்ணையே கவ்விய நிலையில், கரோனாவைக் கட்டுக்குள் வைப்பதில் வெற்றி பெற்ற உலகின் முதல் நாடாகத் திகழ்கிறது கியூபா.

அத்துடன், கரோனாவை எதிர்கொள்ள தன்னிடம் உதவி கேட்ட 22 நாடுகளுக்கு, 1200 மருத்துவர்களை அனுப்பி வைத்துள்ளது கியூபா. தனக்கு நெருக்கமான தென்னாப்ரிக்காவுக்கு மட்டும் 200 மருத்துவர்களை அனுப்பியுள்ளது.

அந்த நெருக்கம், ஆங்கில ஆட்சிக்கு எதிரான தென்னாப்ரிக்க சுதந்திரப் போராட்டத்தின் போதிருந்தே ஏற்பட்டதாகும். அப்போது தென்னாப்ரிக்க மக்கள் தலைவர் நெல்சன் மண்டேலாவை ஆதரித்து நின்றது கியூபா.

நெல்சன் மண்டேலா, இந்திய அரசின் உயரிய விருதான “பாரத ரத்னா” வழங்கப்பட்ட முதல் வெளிநாட்டவர் ஆவார். விருதை வழங்கியவர் நமது சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள். இதையெல்லாம் சொல்வது ஏனென்றால், இந்தக் கரோனா காலத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் துன்பப்படக் காரணம் அவர்கள் சென்ற நாடுகள் கியூபா போன்றதில்லை. இங்கு நம் நாட்டிலும் தமிழர்களை நேசித்த வி.பி.சிங் போன்றோர் அதிகாரத்தில் இல்லை. வி.பி.சிங், ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்துகொண்ட இந்திய அமைதிப்படையைத் திரும்ப அழைத்துக் கொண்டவரும் ஆவார்.

கியூபாவின் இந்த கைமாறு கருதா கடமைப்பாட்டிற்குக் காரணம், அங்கு பொதுவுடமைக் கட்சியின் ஆட்சி நடைபெறுவதுதான். கியூபாவைப் போல் பொதுவுடமைக் கட்சி ஆட்சி நடக்கும் சிறிய மாநிலங்களில் ஒன்றான கேரளமும் கரோனாவைக் கட்டுப்படுத்தி, இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. கரோனாவால் வெளிநாடுகளில் தவித்த மலையாளிகளையும் தன்னிடம் அழைத்துக் கொண்டுள்ளது, அதற்கு மிகவும் உதவியாக இருந்தது, கேரளாவில் உள்ள வெளிநாடு வாழ் மலையாளிகள் நலத் துறையேயாகும். 25க்கும் மேற்பட்ட விமானங்களை ஒன்றிய அரசிடம் பெற்று அத்தனை மலையாளிகளையும் அழைத்துவந்துவிட்டது பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் அரசு.

ஆனால் வெளிநாடு வாழ் தமிழர்கள் நிலையோ பரிதாபம். கரோனாவால் அவர்கலில் பலரும் வேலை இழந்து, உணவும் உறைவிடமும் இன்றி தெருவில் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அங்கே அல்லலுறுகிறார்கள் என்றால், அவர்களின் குடும்பத்தினர் இங்கே அவதிப்படுகிறார்கள்.

அவர்களைத் தாயகம் அழைத்துவர அதிமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பது இதுவரை தெளிவாகவில்லை. இதன் மீதான சென்னை உயர் நீதிமன்றத்தின் கேள்விக்கு, “விமானம் தரையிறங்கத் தமிழ்நாடு அனுமதி அளிக்கவில்லை” என ஜூன் 30இல் பதிலளித்தது ஒன்றிய அரசு.

அதேசமயம், 10 மடங்கு கூடுதல் கட்டணமும், தனிமைப்படுத்தலுக்கான ஹோட்டல் கட்டணமும் கொண்ட சார்ட்டர்டு விமானங்களை மட்டுமே தமிழகத்தில் தரையிறங்க அனுமதிக்கிறது அதிமுக அரசு.

பெரும்பாலும் தமிழர்கள் வளைகுடா நாடுகள், கிழக்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில்தான் உள்ளனர். இவர்கள் தமிழகம் திரும்ப, ஒன்றிய அரசு ஏன் விமானங்களைத் தரவில்லை என்பதற்கான பதிலையும் இதுவரை தமிழக மக்களிடம் தெரிவிக்கவில்லை அதிமுக அரசு. இது சரியல்ல, ஓர் அரசுக்கு இது அழகுமல்ல. ஆனால் வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்டாக வேண்டும். அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்.

 

கரோனா நெருக்கடியால் வெளிநாடுகளில் வேலை செய்துவந்த தமிழர்களும் தவிக்கும் நிலை!

அவர்களைத் தாயகம் அழைத்துவர, தமிழர்க்கென நாடு இல்லாதது அதைவிடவும் பெரிய குறை!

 

இதை உணர்ந்து, ஒன்றிய அரசை உரிய நடவடிக்கை எடுக்கக் கோருவதுடன், தமிழக அரசை வெளிநாடு வாழ் தமிழர்நல அமைச்சகத்தை அமைக்கவும் , வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரியம் அமைக்கக்கோரியும் வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

மேற்கண்ட வெளிநாடு வாழ் தமிழர்களை உடனடியாக தாயகம் அழைத்து வர  வலியுறுத்தி நாளை (05.07.2020) காலை 10 மணியளவில் தமிழ்நாடு முழுவதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சமூக இடைவெளியை பின் பற்றி தங்களது இல்லங்களில் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தை நடத்துவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்