Skip to main content

ஜெ.அன்பழகனின் மறைவு ஆறாத் துயரில் ஆழ்த்துகிறது! தமிழக வாழ்வுரிமை கட்சி இரங்கல்!

Published on 10/06/2020 | Edited on 10/06/2020
j anbazhagan dmk


பத்தாண்டு கால சட்டமன்ற தோழமை, பழகுதற்கினிய மாபெரும் பெருந்தன்மை, மறப்பதற்கிலா அரிய நண்பர் ஜெ.அன்பழகனின் மறைவு ஆறாத் துயரில் ஆழ்த்துகிறது! என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கரோனா கொடியது, எவரையும் மடியச் செய்வது என்ற வகையில்தான், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஜெ.அன்பழகனையும் பழி தீர்த்திருக்கிறது.

ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 80% ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் உதவியுடன் செலுத்தப்பட்டு, உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து, அவரது சிறுநீரக, இதயச் செயல்பாடுகள் மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 10) காலை அவர் உயிரிழந்த துயரச் செய்தி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த ஜெ.அன்பழகன் திமுக சார்பில் 3 முறை எம்எல்ஏவாக வென்றவர். 2001இல் தியாகராய நகர் தொகுதி, 2011இல் மற்றும் 2016இல் சேப்பாக்கம் தொகுதி. அவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

 

 


அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் திமுக தலைமைக்கும் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பின் என் இதயத்தின் ஆழத்திலிருந்து இரங்கலைத் தெரிவிக்கிறேன்.

பத்தாண்டு காலம் சட்டமன்றத்தில் அன்பழகனுடன் பணியாற்றிய தோழமையால், பழகுதற்கினிய மாபெரும் அவரது பெருந்தன்மையை உணர்ந்தேன். அதன் மூலம் மறப்பதற்கில்லா அரிய நண்பராக நிரந்தரமாக என் நெஞ்சில் நிறைந்திருக்கிறார். ஆறாத் துயரில், மீளாத் துயரில் ஆழ்த்துகின்ற அன்பழகனின் அகால மறைவை எப்படித் தாங்குவது?

காலமே காலமே, கரோனாவே கரோனாவே, என்ன செய்ய முடியும் உங்களின் பழிவாங்கலுக்கு? பத்தாண்டு கால சட்டமன்றத் தோழமை, பழகுதற்கினிய மாபெரும் பெருந்தன்மை, மறப்பதற்கிலா அரிய நண்பர் ஜெ.அன்பழகனின் மறைவு ஆறாத் துயரில் ஆழ்த்துகிறது! இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நடிகர் விஜய் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்' - சீண்டிய எல்.முருகன்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
MM

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்ஸாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று மாலை முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

NN

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சமூக நல்லிணக்கத்துடன் மக்கள் அனைவரும் வாழ்ந்து வரும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA)  2019 போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், நடிகர் விஜயின் அறிக்கை குறித்த கேள்விக்கு பாஜகவின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், 'குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்பு எதுவும் இல்லை. இச்சட்டம் குறித்து நடிகர் விஜய் உள்ளிட்ட அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Next Story

'15 மணி நேரத்தில்...'- திணறிய த.வெ.க ஐடி விங் 

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
NN

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை எனத் தெரிவித்து 2026 ஆம் ஆண்டுதான் நமது இலக்கு என்று தமிழக சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து செயல்பட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி படுதீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய அணியை தொடங்கியும் நிர்வாகிகள் நியமனம் பற்றிய அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து நேற்று த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார் விஜய். முதல் உறுப்பினராக விஜய் இணைந்தார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை ஃபாலோ பண்ணி, வரப் போகிற சட்டமன்ற தேர்தலை நோக்கி, என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய, நாங்க ஏற்கனவே வெளியிட்ட எங்க கட்சியின் உறுதி மொழியை படிங்க. அது எல்லாருக்கும் பிடித்திருந்தால் விருப்பப்பட்டால் இணைஞ்சிடுங்க” என்றார்.

கட்சியில் இணைவதற்கான உறுதிமொழி வெளியிடப்பட்டது. அதில், “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக் காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்ட 15 மணிநேரத்தில் 20 லட்சம் பேர் தவெகவில் இணைத்துள்ளதாக கட்சி தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் இணைய முற்பட்டதால் அதற்கான குறுஞ்செய்தி அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சர்வர் முடங்கியதை எங்களால் முடிந்த அளவுக்கு சரிபார்த்துவிட்டோம் என தவெகவின் ஐடி பிரிவு தெரிவித்துள்ளது. அதிகபட்சம் முதல் நாளில்  5 லட்சம் பேர் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் ஆனால் 15 மணிநேரத்தில் 20 லட்சம் விண்ணப்பங்கள் வந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறும் நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழகம் மட்டுல்லாது பல மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் குவிந்து வருவதாகவும் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.