ADVERTISEMENT

பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பீதி! புதுச்சேரி, கடலூர் அரசு மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்!

09:46 AM Oct 30, 2018 | sundarapandiyan

கடந்த ஒரு மாத காலமாக பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு 12 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும் மற்றும் பலவித பருவகால காய்ச்சலுக்கு என 71 பேரும் உள் நோயாளிகளாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 3 டெங்கு நோயாளிகளும், 25-க்கும் மேற்பட்ட பல்வேறு தீவிர காய்ச்சலுடைய நோயாளிகளும் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். புதுச்சேரியின் அண்டை மாவட்டங்களான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் டெங்கு, பன்றி, பருவ கால தீவிர வைரஸ் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டவர்களை இந்த மாவட்டடங்களை சேர்ந்த மருத்துவர்கள் புதுச்சேரிக்கு தீவிர சிகிச்சைக்காக பரிந்துரைப்பதால் புதுச்சேரி ஜிப்மர், அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் அதிக அளவில் செல்கின்றனர்.

ADVERTISEMENT

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி போன்ற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதலுதவி சிகிச்சை பெறும் நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக கடலூர், புதுச்சேரிக்கு அனுப்பப்படுகின்றனர்.

அதேபோல் சாதாரண காய்ச்சல், மர்ம காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், மலேரியா, டைபாய்டு என எந்த காய்ச்சல் என்றாலும் மக்கள் பன்றி காய்ச்சலாக இருக்குமோ…. டெங்கு காய்ச்சலாக இருக்குமோ எனும் பீதியில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அதிகளவில் நாடி வருகின்றனர்.

அதனால் கடலூர் தலைமை மருத்துவனைக்கு இந்த ஒரு மாதகாலமாக தினசரி 300 லிருந்து 400 பேர் வரை வெளி நோயாளிகளாக சிகிச்சைக்கு செல்கின்றனர். அதனால் கூட்டம் அதிகமாவதால் மருத்துவர்களால் பொறுமையாக கவனித்து உரிய சிகிச்சை தர முடியவில்லை. இதனால் மருத்துவ பணியாளர்களுக்கும் நோயாளிகள் தரப்பினரும் மோதிக்கொள்ளும் சம்பவங்களும் பல மருத்துவமனைகளில் நடக்கின்றன. அதையடுத்து கடந்த 3 நாட்களாக கடலூர் மருத்துவ மனையில் கூட்டம் அதிகரித்ததால் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் சென்று காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேசமயம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கும் நடவடிக்கை போதுமானதாக இல்லை எனவும், கடந்த காலங்களில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பருவ கால நோய் தாக்குதல் சமயத்தில் வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறையினர் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் இப்போது வெறும் அறிவிப்புகள் மட்டுமே வெளியாகின்றன என்றும், மேலும் அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் இல்லை, நவீன மருத்துவ உபகரணங்கள் இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே மக்களின் பீதியை போக்குமளவுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள், டெங்கு, பன்றி காய்ச்சல், பருவ கால காய்ச்சல்கள் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் போர்க்கால அடிப்படையில் மருத்துவ பணியாளர்களை நியமித்து, நவீன மருத்துவ உபகரணங்களை அனைத்து அரசு மருத்துவமனைகளில் நிறுவ வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT