ADVERTISEMENT

ஈர சாம்பல் விநியோகம் திடீர் நிறுத்தம்; மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு வருவாய் இழப்பு!

11:23 AM Apr 17, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இருந்து ஈர சாம்பல் விநியோகம் திடீரென்று நிறுத்தப்பட்டதால் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 840 மற்றும் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக தினசரி 24 ஆயிரம் டன் நிலக்கரி எரியூட்டப்படுகிறது. நிலக்கரி எரிக்கப்படுவதால் நாளொன்றுக்கு 7 ஆயிரம் டன் சாம்பல் வெளியேறுகிறது. இவை உலர் சாம்பலாகவும், ஈர சாம்பலாகவும் வெளியேற்றப்படுகிறது. நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் சிமென்ட் ஆலைகளுக்கும், செங்கல் உற்பத்திக்கும் சாம்பல் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி, மேட்டூர் அனல் மின் நிலையத்தை பார்வையிட நேற்று முன்தினம் (ஏப். 15) வந்தார். அவருடைய வருகையையொட்டி, ஈர சாம்பல் விநியோகம் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டது. சாம்பல் அதிகளவில் காற்றில் கலந்து பறப்பதால், ஈர சாம்பல் பாரம் ஏற்றிச்சென்ற லாரிகள் அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூர் - எடப்பாடி சாலையிலும், மேட்டூர் - சேலம் சாலையிலும் 2 கி.மீ. தொலைவிற்கு லாரிகள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

ஈர சாம்பல் விநியோகம் நிறுத்தப்பட்டதால் அனல் மின் நிலையத்தின் பின்புறம் உள்ள சாம்பல் ஏரிகள் நிரம்பி, உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT