ADVERTISEMENT

பத்திரப்பதிவுக்கு 50 ஆயிரம் லஞ்சம் வசூல்; சார்பதிவாளர் கைது!  

11:47 AM Feb 09, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலத்தில், பத்திரம் பதிவு செய்ய 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வசூலித்த சார்பதிவாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பழனிவேல். கொழிஞ்சிப்பட்டியில் இவருடைய தாயார் பெயரில் 17 சென்ட் பரப்பளவில் காலி நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்ற முடிவு செய்துள்ளார். இதையடுத்து உடையாப்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த சேலம் கிழக்கு பதிவுத்துறை அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பித்துள்ளார். அதன்பேரில், சம்பந்தப்பட்ட இடத்தை தாதகாப்பட்டி பிரிவு பத்திரப்பதிவு சார்பதிவாளர் செல்வபாண்டியன் (52) நேரடியாகச் சென்று பார்வையிட்டார். அப்போது அவர், குறிப்பிட்ட அந்த சொத்தை பெயர் மாற்றம் செய்வதில் வில்லங்கம் இருப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் எந்த வில்லங்கமும் இல்லாமல் உடனடியாக சொத்தை பெயர் மாற்றம் செய்து தருவதாகவும் கூறியுள்ளார். லஞ்சப் பணத்தை வசூலிக்கவே தனக்கான உதவியாளராகப் பத்திர எழுத்தர் கண்ணன் என்பவரை நியமித்துள்ளார். அவர் மூலமாக லஞ்சப் பணத்தை கொடுத்து அனுப்பும்படியும் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பழனிவேல், இதுகுறித்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். சார்பதிவாளர் செல்வபாண்டியனுக்கு வலைவிரித்த லஞ்ச ஒழிப்புப் பிரிவினர், ரசாயன பவுடர் தடவப்பட்ட 50 ஆயிரம் ரூபாயை பழனிவேலிடம் கொடுத்து அனுப்பினர்.

பிப். 6ம் தேதி காலை பணத்தை எடுத்துக்கொண்டு சென்ற பழனிவேல், கொண்டலாம்பட்டியில் வைத்து பத்திர எழுத்தர் கண்ணனிடம் கொடுத்தார். அங்கிருந்து பத்திரப் பதிவு அலுவலகத்திற்குச் சென்ற கண்ணன், அந்தப் பணத்தை சார்பதிவாளர் செல்வபாண்டியனிடம் கொடுத்துள்ளார். அதை ஆவலுடன் வாங்கிய செல்வபாண்டியனை, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் பாய்ந்து சென்று கையும் களவுமாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர். லஞ்சம் வசூலித்துக் கொடுத்த பத்திர எழுத்தர் கண்ணனையும் கைது செய்தனர்.

இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக, மருத்துவப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில் செல்வபாண்டியனுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரிய வந்தது. இதனால் அவர் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பத்திர எழுத்தர் கண்ணன் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT