ADVERTISEMENT

உள்ளூர் தொல்லியல் தடயங்களை மாணவர்கள் ஆவணப்படுத்த வேண்டும் - தொல்லியல் ஆய்வாளர்

03:08 PM Sep 07, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகிலுள்ள கொடிப்பங்கு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தொடக்க விழா மற்றும் தொல்பொருட்கள் கண்காட்சி நடந்தது. பள்ளித் தலைமையாசிரியை து. முத்துலட்சுமி தலைமை தாங்கினார். தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலாளர் கா. முத்துராமன் முன்னிலை வகித்தார். எட்டாம் வகுப்பு மாணவன் செ. செங்கதிர் செல்வன் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளரும் தொல்லியல் ஆய்வாளருமான வே. ராஜகுரு, “தமிழ்நாட்டின் கால்பகுதி கடற்கரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளதால் இயற்கை துறைமுகங்களும் உப்பங்கழிகளும் நிறைந்த இங்கு ரோமானியர், யூதர், சீனர் உள்ளிட்ட வெளிநாட்டு வணிகர்கள் வணிகம் செய்துள்ளனர்.

அஞ்சுவண்ணம் எனும் இஸ்லாமியர் தலைமையிலான வணிகக் குழுவினர் தீர்த்தாண்டதானம் கோயில் மண்டபத்தை பராமரித்த கல்வெட்டு செய்தி உள்ளது. ஆனால் இன்று அம்மண்டபமும் கல்வெட்டும் அழிந்துபட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களைத் தொடங்கி முழு வீச்சில் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தொல்லியலை பள்ளி மாணவர்கள் கற்றுக் கொண்டு, உள்ளூரில் உள்ள தொல்லியல் தடயங்களை அடையாளம் கண்டு பாதுகாக்க வேண்டும்” என்று பேசினார். தொடர்ந்து ஏழாம் வகுப்பு மாணவி ம. அபிநயாஸ்ரீ நன்றி கூறினார்.

பின்னர் நடந்த தொல் பொருட்கள் கண்காட்சியில் பழைய, புதிய, நுண் கற்காலக் கருவிகள், கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகளுடன் உலகப் பாரம்பரியச் சின்னங்கள், குடைவரைக் கோயில்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றை பற்றி மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதுடன், இதுபோன்ற தொல் பொருட்களை எப்படி சேகரிப்பது, பாதுகாப்பது என்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT