ADVERTISEMENT

சிதம்பரத்தில் சிபிஎம் ரயில் மறியல் போராட்டம்!

01:33 PM Mar 02, 2024 | ArunPrakash

சிதம்பரம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை - கோவை சதாப்தி ரயில் சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். மயிலாடுதுறை - மைசூர் ரயில் சிதம்பரம் வழியாக கடலூர் சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும். சிதம்பரம் ரயில் நிலையத்தில் சாரதா - சேது மற்றும் கம்பன் ரயில்கள் நின்று செல்ல வேண்டும். விழுப்புரம் - மயிலாடுதுறை தடத்தை இரட்டை ரயில் பாதையாக மாற்றம் செய்ய வேண்டும். ரயில் நிலையத்தில் லிஃப்ட் வசதி ஏற்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

சிதம்பரம் வழியாக இயக்கப்பட்ட தாம்பரம் செங்கோட்டை ரயில் தற்போது மயிலாடுதுறை வரை மட்டுமே இயங்குகிறது. இதனை மீண்டும் தாம்பரத்தில் இருந்து இயக்க வேண்டும். ரயில் நிலைய நடைமேடைகளுக்கு பயன்படுத்தப்படும் மேம்பாலம் மூன்றாவது நடைமேடை வரையில் மட்டுமே உள்ளது. இதனால் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மாணவ, மாணவிகள் மூன்றாவது நடைமேடை ரயில் வழி இருப்பு பாதையில் கீழ் இறங்கி நடந்து செல்ல வேண்டிய சிரமம் உள்ளது. மேம்பாலத்தினை கிழக்குப் பகுதி வரை நீட்டிக்க வேண்டும். ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த பார்சல் புக்கிங் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும். திருச்செந்தூர், பாமணி & மீனாட்சி விரைவு ரயில்கள் பரங்கிப்பேட்டையில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு சனிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட வந்தனர்.

ADVERTISEMENT

அப்போது ரயில் நிலையம் நுழைவு வாயில் முன்பு சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பி.ரகுபதி தலைமையில் காவல்தறையினர் கம்யூனிஸ்ட் கட்சியினரை தடுத்து நிறுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரயில் வரும்போது 10 பேரை மட்டும் நடைமேடை வரை அனுமதித்தனர். அவர்கள் மத்திய மோடி அரசையும் ரயில்வே நிர்வாகத்தையும் கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்தும், நிறைவேற்றக்கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள். இதற்கு ஆதரவு தெரிவித்த ரயில் பயணிகள் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் சிதம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு, முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், சிபிஎம் நகர்குழு உறுப்பினர்கள், ரயில் பயணிகள் நல சங்கம் அப்துல் ரியாஸ், ஏ.சிவராம வீரப்பன், அம்பிகாபதி, பரங்கிப்பேட்டை ரயில் பயணிகள் சங்க அருள்முருகன், இந்திய மாணவர்சங்க செயற்குழு உறுப்பினர் சௌமியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT