ADVERTISEMENT

“அனுமதி இல்லாமல் மசூதி கட்டுவதை நிறுத்த வேண்டும்..” - ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா 

04:19 PM Apr 04, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் வயல் வெளியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு முகமது அலி என்பவர், ஒரு கட்டடம் கட்டிய நிலையில், அந்த கட்டடத்தின் மேலே பள்ளிவாசல் போன்ற அமைப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து மினர்வா கட்டப்பட்டு வந்த நிலையில், அது அறக்கட்டளை என்று பெயர் பலகையும் வைக்கப்பட்டது.


இதனால், அப்பகுதி பாஜக பிரமுகர்கள் அனுமதி இல்லாமல் பள்ளிவாசல் கட்டுவதாக கூறி போராட்டம் நடத்த ஆயத்தமானார்கள். இந்தப் போராட்ட அறிவிப்பையடுத்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றுடன் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் டிசம்பர் இறுதிக்குள் மினர்வாக்களை இடிப்பது என்று உடன்பாடு எழுதப்பட்டது. ஆனால் இதுவரை அகற்றப்படவில்லை என்பதால் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையில் மேற்பனைக்காடு மழைமாரியம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக சம்மந்தப்பட்ட கட்டடத்தை நோக்கி சென்றனர்.


ஆலங்குடி டி.எஸ்.பி வடிவேல் தலைமையிலான போலீசார் வழியில் மறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனால் சுமார் ஒரு மணி நேரம் வரை அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து ஊராட்சிமன்றத் தலைவர் மஞ்சுளா விஜயன் ஏப்ரல் 12ந் தேதிக்குள் கட்டிட உரிமையாளரே மினர்வாக்களை இடித்துக்கொள்ள வேண்டும். தவறினால் 13 ந் தேதி அதிகாரிகள் முன்னிலையில் மினர்வாக்களை அகற்றுவதாக எழுதிக் கொடுத்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.


இது குறித்து எச்.ராஜா கூறும் போது, “அனுமதி இல்லாமல் மசூதி கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று போராட்டம் அறிவித்த நிலையில் டிசம்பருக்குள் இடிப்பதாக அதிகாரிகள் எழுதிக் கொடுத்தனர். ஆனால் இடிக்கவில்லை. அதனால் தான் இன்று கூடியிருக்கிறோம். இப்போது ஊராட்சி மன்றத் தலைவர் ஒரு வாரத்தில் இடிப்பதாக கூறியுள்ளார். இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்” என்றார்.


தொடர்ந்து புதுக்கோட்டையில் பாஜக அலுவலகம் கட்ட அனுமதி பெறவில்லையே என்ற நமது கேள்விக்கு, “தற்போது அனுமதி வாங்கியுள்ளதாக” கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT