ADVERTISEMENT

அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநில மாநாடு - மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதம்

05:28 PM Oct 06, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனித நேய மக்கள் கட்சிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ’’மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் 7.10.2018 அன்று நடைபெறும், “அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநில மாநாடு”மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று பெரிதும் விரும்பி, இதய பூர்வமாக வாழ்த்துகிறேன். இந்த மாநாட்டில் தலைவர் கலைஞர் அவர்களின் சமூக நீதி குறித்த குறுந்தகடு வெளியிடப்படுகிறது என்பதையறிந்து இரட்டிப்பு மகிழ்ச்சியடைகிறேன்.

ADVERTISEMENT

“பாசிச பா.ஜ.க. அரசாலும், அதற்கு துணை போகும் அதிமுக அரசாலும்” இன்றைக்கு சிறுபான்மையின மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் துயரத் தீயில் தள்ளப்பட்டு துடித்துக் கொண்டிருக்கிறார்கள். மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில், அரசியல் சட்டத்தால் சுதந்திரமான அமைப்புகளாக உருவாக்கப்பட்ட அத்தனை அமைப்புகளும், இன்றைக்கு “தன்னாட்சி சுதந்திரத்தை” இழந்து, பா.ஜ.க.வையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகித் தத்தளித்து நிற்கின்றன. உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் “ஜனநாயகத்தைக் காப்பாற்றவேண்டும்” என்று எழுப்பிய வரலாறு காணாத குரல், மக்களின் மனதை படபடக்க வைத்ததை நாம் மறந்து விட முடியாது.

அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள மதசார்பின்மை, சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகம் உள்ளிட்ட அத்தனை அடிப்படை அம்சங்களும் பேராபத்தை எதிர்நோக்கியுள்ளன என்பது மட்டுமின்றி, பல்வேறு வகைகளில் இந்த அடிப்படை அம்சங்கள் எல்லாம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. போராடிப் பெற்ற பொன் போன்ற சுதந்திரம், பொல்லாத பா.ஜ.க. ஆட்சியில் மீண்டும் ஒருமுறை பறிபோய் விடுமோ என்ற அச்ச உணர்வு, நாடு முழுவதும் காட்டுத் தீ போல் பரவி, இந்த பாசிச பா.ஜ.க. ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்ற தாக்கம் நாட்டு மக்கள் மத்தியில் எரிமலையாகத் தகித்துக் கொண்டிருக்கிறது.

இந்திய நாட்டை வளைத்திருக்கும் இத்தகைய இடர்மிகு சூழ்நிலையில் நடைபெறும் இந்த அரசமைப்புச் சட்டப்பாதுகாப்பு மாநில மாநாடு, பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த தமிழகத்திலிருந்து விடுக்கப்படும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக அமையும் என்று வாழ்த்தி, அந்த சிறப்புமிக்க முயற்சியை மேற்கொண்டிருக்கும் மனித நேய மக்கள் கட்சிக்கும், அதன் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்!’’என்று குறிப்பிட்டுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT