
சென்னையில் மழைக்கால சிறப்பு முகாம்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார். வடகிழக்கு பருவமழை சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்து சில இடங்களில் முடங்கியுள்ளது. தொடர் மழையின் காரணமாக உடல்நல பாதிப்பு ஏற்படுவதால் சிறப்பு முகாம்களை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் தற்போது தொடங்கிவைத்துள்ளார். சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "வருமுன் காப்போம் திட்டத்தின் மூலமாக மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு மருந்துகள் வழங்கப்படும்" என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.