ADVERTISEMENT

டெல்லியில் இருப்பது மோசடி ஆட்சி; தமிழகத்தில் கூலிப்படை ஆட்சி! மு.க.ஸ்டாலின் அதிரடி!!

08:38 AM Feb 10, 2019 | elayaraja

டெல்லியில் இருப்பது மோடி ஆட்சியல்ல; அது மோசடி ஆட்சி. அதுபோல் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் கூலிப்படை ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் ஆதித்தமிழர் பேரவையின் வெள்ளிவிழா ஆண்டையொட்டி, அருந்ததியர் அரசியல் எழுச்சி மாநாடு சனிக்கிழமை (பிப்ரவரி 9, 2019) மாலையில் நடந்தது. அந்த அமைப்பின் தலைவர் அதியமான் தலைமை வகித்தார். மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேருரையாற்றினார். அவர் பேசியது:

ADVERTISEMENT

ஆதித்தமிழர் பேரவை மாநாட்டிற்கு நான் வந்திருப்பதை எண்ணி யாரும் ஆச்சர்யப்படத் தேவையில்லை. இங்கே வருவதை கடமையாக கருதி வந்திருக்கிறேன். அருந்ததியர் இயக்கத்திற்கும் திராவிட இயக்கத்திற்கும் எப்போதுமே நெருக்கமான தொடர்பு உண்டு. ஒருமுறை தந்தை பெரியாரிடம், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், நாங்கள் திராவிடர் கழகத்தில் சேர்ந்துவிடுவதால் எங்களுக்கு என்ன பயன்? என்று கேட்டார். மேலும் அவர், திராவிட நாடு கிடைத்துவிட்டால் அப்போது எங்களுக்கு என்ன பயன்? என்றும் கேட்டார்.

அதற்குத் தந்தை பெரியார் சிரித்துக்கொண்டே, 'உங்களுக்கு இழப்புதான்' என்று பதில் அளித்தார். அதைக்கேட்டு அந்த நபர் அதிர்ச்சி அடைந்தார். மேலும், உங்கள் சமூகத்தின் பெயரில் இருக்கும் ஆதிதிராவிடர் என்ற சொல்லில் இருந்து ஆதி நீங்கி, திராவிடர் ஆகிவிடுவீர்கள் என்று பெரியார் பதில் சொன்னார். இப்படிச் சொன்னதும் அந்த நபர் உடனடியாக திராவிடர் கழகத்தில் இணைந்து கொண்டார்.

நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள். தமிழினத்தைச் சார்ந்தவர்கள் என்ற உணர்வு வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞர், நான் சீமான் வீட்டுப்பிள்ளை அல்ல; சாமானியன் வீட்டுப்பிள்ளை என்று அடிக்கடி சொல்வார். அதனால் திமுக ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் கலைஞர் சாமானியர்கள் மீது அதிக அக்கறை செலுத்தினார்.

கடந்த 2008ல் திமுக ஆட்சியின்போது, அருந்ததியர் சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு குறித்து ஆளுநர் உரையில் குறிப்பிட்டார். இது குறித்து ஆய்வு செய்ய, நீதியரசர் ஜனார்த்தனன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார் கலைஞர். அந்தக்குழுவின் அறிக்கை கைக்கு கிடைத்த ஐந்தே நாள்களில் அமைச்சரவையைக் கூட்டி, உடனடியாக ஒப்புதல் பெற்றார். அந்த சமயத்தில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் படுத்த படுக்கையாக இருந்தபோதும்கூட அருந்ததியர் சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்றும் எந்த வகையிலும் தாமதம் ஆகிவிடக்கூடாது என்றும் கருதி, துணை முதல்வராக இருக்கும் நீ போய் அதற்கான பணிகளை செய்து முடி என்று என்னை அனுப்பி வைத்தார். அதன்பிறகு 2009ம் ஆண்டு, பிப்ரவரி 26ம் தேதி, அருந்ததியினர் சமூகத்திற்கு உள்ஒதுக்கீடு மசோதாவை சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றிக் காட்டினேன். அந்த இறுமாப்புடனும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.

ஆனால் இந்த உள்ஒதுக்கீடு சட்டத்தை ஆட்சியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு பின்பற்றவில்லை. விரைவில் நாடாளுமன்ற தேர்தலோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வரும். அல்லது, பொதுதேர்தலேகூட வரலாம். அதில் மாற்றம் ஏற்பட்டு, மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்போது இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இன்றைக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு அடித்தட்டு மக்களைப் பற்றி எந்த சிந்தனையும் இல்லை. இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கும் மோடி அரசு...அதை மோடி அரசு என்று சொல்லமாட்டேன். மோசடி அரசு என்றுதான் சொல்ல வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக ஆக்குவதாக பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்கள். இதே உறுதிமொழியைத்தான் கடந்த 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சொன்னார்கள். விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறதா என்றால் இல்லை. உண்மையில் விவசாயிகளின் வருமானம் மூன்று மடங்கு சரிந்திருக்கிறது. டெல்லியில் விவசாயிகளை அரை நிர்வாணமாகப் போராட விட்டதுதான் மோடி அரசு செய்த ஒரே சாதனை.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதம் இருக்கும் நிலையில், தமிழகத்திற்கு மோடி அடிக்கடி வரும் வகையில் திட்டமிடுகிறார்கள். குட்டிக்கரணமே போட்டாலும் தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியாது. காலே இல்லாதபோது எப்படி ஊன்ற முடியும்?

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் தருவதாகவும், முதல்கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் இந்த கரிசனம் வர வேண்டியதன் அவசியம் என்ன? இது ஓட்டுக்காக தரப்படும் லஞ்சம். இதே தந்திரத்தைதான் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்பதிலும் பின்பற்றுகிறது பாஜக. ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் அதாவது மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவர்கள் எல்லோரும் ஏழைகள் என்கிறது பாஜக.

உயர்சாதியினரின் வாக்குகளைப் பெற்றாக வேண்டிய தந்திரத்துடன் பாஜக செயல்படுகிறது. முகத்தில் குத்துவது போலதான் மோடி வருவார். ஆனால், வயிற்றில் குத்தி விடும் தந்திரம் படைத்தவர் மோடி என்பதை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும். மோடி, இந்துக்களுக்கு மட்டும்தான் கருணை காட்டுவதாக நினைத்துவிட வேண்டாம். அதிலும் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும்தான் அவர் கருணை காட்டுவார். மத்தியிலே இருப்பது மோடி பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஆட்சிதான்.

மத்தியிலே கார்ப்பரேட் ஆட்சி என்றால் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி கூலிப்படை ஆட்சிதான் நடத்துகிறார். எதிலும் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் என்று ஊழல் செய்து வந்த எடப்பாடி, இப்போது கொலை வரை செய்யத் துணிந்துவிட்டார். யாரின் பெயரால் ஆட்சி நடத்துகிறாரோ அவர் ஓய்வு எடுக்கச் செல்லும் கொடநாடு எஸ்டேட்டின் காவலாளியை கொன்றுவிட்டார். அதை மறைக்க அடுத்தடுத்த கொலைகள் என ஐந்து கொலைகளை அரங்கேற்றியிருக்கிறார்.

இதையெல்லாம் யாரை வைத்து செய்தாரோ அவர்களே இன்று பகிரங்கமாக எடப்பாடி மீது குற்றச்சாட்டுகளை சொல்லி இருக்கின்றனர். அவர்கள் இனிமேல் பேட்டி கொடுக்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் தடை வாங்கினார். இதிலிருந்தே பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதை நாம் அறிந்து கொள்ள முடியும். அவர்களின் குற்றச்சாட்டுக்கு இதுவரை எடப்பாடி பழனிசாமி சரியாக பதிலைச் சொல்லவில்லையே ஏன்?

ஏழு முறை சிறை சென்றிருப்பதாக எடப்பாடி சொல்கிறார். எதற்காக சிறை என்று பட்டியலிட முடியுமா? ஏழு முறை சிறை சென்றிருந்தால் எதற்கும் துணிந்து விடலாம் என்று அர்த்தமா? ஜெயலலிதாவிடம் காரோட்டியாக இருந்த எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜ் மர்மமான முறையில் இறந்து போனார். அவரை எடப்பாடி பழனிசாமிதான் கொலை செய்தார் என்று கனகராஜின் அண்ணன் தனபால் சொல்கிறார். ஏன் இதுவரை அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை?

கிராமங்களில், 'கடப்பாரையை விழுங்கிவிட்டு கம்முனு இருக்கிறான் பாரு' என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல் எதுவுமே நடக்காததுபோல் எடப்பாடி பழனிசாமி சாமர்த்தியமாக இருக்கிறார். அந்த சாமர்த்தியத்தனத்தில் 5 சதவீதம் அளவுக்காவது மக்கள் நலனைப் பற்றி நினைத்துப் பார்த்தது உண்டா? ஆனால், திமுகவுக்கு எப்போதும் மக்களைப் பற்றிய கவலைதான் இருக்கும்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தீரன் சின்னமலை படைத்தளபதியாக இருந்த பொல்லானுக்கு நினைவு மண்டபமும், நினைவுச்சின்னமும் அமைக்கப்படும். இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் ராஜேந்திரன் எம்எல்ஏ, எஸ்ஆர்.சிவலிங்கம், வீரபாண்டி ராஜா, எஸ்ஆர்.பார்த்திபன், வி.பி.துரைசாமி மற்றும் எ.வ.வேலு, ஆ.ராஜா, செந்தில்பாலாஜி, கொங்குமக்கள் கட்சித் தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT