ADVERTISEMENT

மொபைல் செயலி மூலம் பேச்சுப்போட்டி... பரிசுகளை வழங்கி பாராட்டிய காவல்துறை

09:09 AM May 20, 2020 | rajavel

ADVERTISEMENT


காவல்துறை என்றாலே மிடுக்கான தோரணை, கடுப்பான மிரட்டல் பேச்சு இப்படிப்பட்ட செயல்களால் மக்களுக்குக் காவல்துறை மீது ஒருவித கோபம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் சமீபகாலமாக இப்படிப்பட்ட போக்குகளில் இருந்து காவல்துறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை மக்களிடம் அவர்களின் அணுகுமுறை மாறிக்கொண்டே வருகிறது.

ADVERTISEMENT


அதற்கு உதாரணமாக அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக ஒரு சிறப்பான நிகழ்ச்சியை நடத்தி காட்டியுள்ளனர். அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் பொறுப்பேற்ற பிறகு மாவட்டத்தில் பல்வேறு காவல்துறையில் சீர்திருத்தங்களைச் செய்து வருவதோடு, மக்களிடம் சுமுகமான அணுகுமுறை மக்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண்பது பொதுமக்களிடம் அன்பான அணுகுமுறை, அதேநேரத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை நிலைநாட்டுவதில் தீவிர கவனம் எனச் சிறப்பான முறையில் பணி செய்து வருகிறார்.

பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் நட்பை உருவாக்கும் விதத்தில் "கரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருக்கும் நேரத்தைப் பயனுள்ளதாகக் கழிப்பது" என்ற தலைப்பில் மாவட்ட காவல்துறை சார்பில் சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கு என இரு பிரிவாகப் பிரித்து மொபைல் செயலி மூலம் பேச்சுப்போட்டி நடத்தினார்கள்.

இதற்கு மாவட்ட துணை கண்காணிப்பாளர் திருமேனி, ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் மணவாளன், கூடுதல் கண்காணிப்பாளர் கண்ணன் (பொறுப்பு) ஆகியோர் மேற்பார்வையில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் பெரியவர் சிறியவர் என இரு பிரிவினரும் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் பெரியவர் சிறியவர் என பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விதத்தில் போட்டி நடத்தப்பட்டது. இதில் 64 சிறுமியர்கள் 20 பெரியவர்கள் என மொத்தம் 84 பேர் மிகவும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர்.


இந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் சிறந்த மொழி நடை, குரல் ஏற்ற இறக்கம், கருத்துச் செறிவு, தெளிவான உச்சரிப்பு, தன்னம்பிக்கையான பேச்சு ஆகியவற்றில் சிறப்பாகப் பேசியவர்களில் சிறியவர்கள் நான்கு பேர், பெரியவர்கள் நான்கு பேர் எனத் தேர்வு செய்யப்பட்டனர்.


அதில் வெற்றி பெற்றவர்களில் சிறியவர்கள் தரப்பில் அனிதா, விஷ்ணுப்பிரியா, சமிக்க்ஷா, ஸ்ரீவர்த்தினி ஆகியோர் முதல் 4 இடங்களில் வெற்றி பெற்றனர். பெரியவர்களுக்கான போட்டியில் பத்மபிரியா, பவித்ரா, விவேகா, தேவி பிருந்தா ஆகிய நால்வரும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற 8 பேர்களுக்கும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாராட்டுச் சான்றிதழ் பரிசுத்தொகை மற்றும் திருக்குறள் புத்தகம் ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் சுமதி, தனிப் பிரிவு ஆய்வாளர் செல்வகுமாரி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சந்திரகலா மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தன்னம்பிக்கை உருவாக்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சியை அரியலூர் மாவட்ட காவல்துறை நடத்தியுள்ளது வரவேற்கத்தக்கது பாராட்டத்தக்கது என்றார்கள் அரியலூர் மாவட்ட மக்கள்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT