Skip to main content

சிறுதானியங்களின் கோட்டையாக மீண்டும் மாறுமா அரியலூர்!!!

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

Ariyalur issue

 

அரியலூர் மாவட்டம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் சிறுதானியங்களின் கோட்டையாக விளங்கியது. தற்போது அரியலூர் மாவட்டத்தில் சிறுதானியங்கள் தேடும் பொருளாக மாறி உள்ளது. சிமெண்ட் ஆலைகள் படையெடுப்பால் குறிப்பாக சிறு தானிய விவசாயமே கேள்விக்குறியாகிவிட்டது. இதனால் படிப்படியாக அரியலூர் மாவட்ட மக்கள் சிறுதானியங்களை பயிர் செய்வதில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக விலக ஆரம்பித்து விட்டனர். சிறு தானியங்களை பயிர் செய்து சாப்பிட்டவரை அரியலூர் மாவட்ட மக்கள் நோயின்றி ஆரோக்கியமாக இருந்தனர். சிறுதானியங்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டு முத்துச்சோளம் மட்டுமே பிரதான பயிராக இருப்பதால் விவசாயிகள் ஆரோக்கியத்தை இழந்து விட்டனர் என்பது கண்கூடு. நாட்டுரகங்களை பயிர்சாகுபடி செய்து வருவதனால் பூச்சிகளின் தாக்கமே இல்லை. குறைந்த வருமானத்திற்கு உத்தரவாதம் இருந்தது. அண்மை காலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் முத்துச்சோளம் பயிரும் அமெரிக்கப்படைப்புழு தாக்கத்தால் விவசாயமே கேள்விக்குறியாகி விட்டது. 


மேலும் அரியலூர் மாவட்டத்தில் வெட்டி முடிக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் ஏராளமாக உள்ளது. மழை தண்ணீரை அவற்றில் சேமித்து வைக்க நம்மாழ்வார் கூறிய கூற்று நினைவுக்கு வருகிறது.

அவர் "தண்ணீரை பூமிக்கடியில் தேடுவது தவறு அதை வானத்திலிருந்து வரவழைக்க வேண்டும்" என்றார்.

"தண்ணீரும் நீர் சேமிப்புத் திட்டங்களின் அவசியமும்"

தண்ணீரை சேமிக்க பல வழிகளில் தொலைநோக்குச் சிந்தனையுடன் திட்டம் தீட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம். வெறுமனே படித்தவர்களைக் கொண்டு திட்டம் தீட்டுவது பெரும் ஆபத்தில் முடியும். எனவே துறை சார்ந்த ஓய்வுபெற்ற அறிஞர்களையும் மேலும் பகுதி சார்ந்த சமூக ஆர்வலர்களையும் களத்தில் ஆர்வமுடைய இயற்கை ஆர்வலர்களையும் ஒருங்கிணைத்து திட்டங்களை உருவாக்க வேண்டும். அப்போது தான் நீர்மேலாண்மை திட்டத்தில் நாம் விரைவில் தன்னிறைவு அடைய முடியும். 

"இருக்கின்ற நீர்நிலைகளை பாதுகாப்போம்"

தமிழகத்தில் இருக்கின்ற நீர்நிலைகளை தூர்வார தெளிவான திட்டமிடல் வேண்டும். ஏனோ தானோ என்று திட்டத்தை போடக் கூடாது. இதனால் பணம், நேரம் விரயமாகிறது திட்டங்கள் முடக்கப்படுகிறது நாம் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் கிடைக்கவில்லை என்பது கண்கூடு. குறிப்பாக நீர் மேலாண்மைத் திட்டங்களை நிறைவேற்றும் போது அரசியல் உள்ளிட்ட எவருடைய குறுக்கீடும் தலையீடும் நீர்நிலைகளை தூர்வாருவதிலும் இருக்கக் கூடாது.

 

 


"உயிரிழப்பைத் தடுக்க திட்டங்கள்"

நீர்நிலைகளை ஆழப்படுத்தும் போது உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க நீர்நிலைகளை படிப்படியாக ஆழப்படுத்தும் முறையினை தெளிவாக வகுக்க வேண்டும். பல இடங்களில் உயிரிழப்பு நடப்பதற்கு மிக முக்கிய காரணம் படித்துறை போன்று இருக்க வேண்டிய நீர்நிலைகளை சவத்துறையாக மாற்றுவது என்பது அலட்சியத்தின் காரணமாக நிகழ்ந்து வருகிறது. எனவே நீர்நிலைகளை ஆழப்படுத்தும் போது ஒவ்வொரு படி நிலையாக லேயர் லேயராக ஆழப்படுத்த வேண்டும். அப்போதுதான் கால்நடைகளுக்கும் நீர் அருந்த நீர்நிலைகளில் இறங்கி குடிக்க வசதியாக இருக்கும்.

"புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்"

மக்கள் தொகைக்கு தகுந்தாற்போல் புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். உதாரணமாக அரியலூரில் வெட்டி முடிக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில் அணை போல நீர்த்தேக்கங்களை உருவாக்கலாம். அரியலூரில் மேட்டூர் அணை நீர்த்தேக்கங்களை போன்று பல நீர்த்தேக்கங்களை உருவாக்க முடியும். நீர்நிலைகளை இதுநாள் வரைக்கும் முன்னாள் முதல்வர் காமராசரைத்தவிர ஆண்ட கட்சிகள் நாங்கள் கடனும், மின்சாரமும் தருகிறோம் ஆழ்துளையிட்டு விவசாயம் செய்யுங்கள் என்றது.

இது எவ்வளவு பெரிய முரண்பாடு. மனிதன் வாழ தேவையானவற்றில் நீரும் சோறும் அவசியம் இல்லைனா அழிவு நிச்சயம் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. மற்ற விலங்குகளை விட மனித விலங்கிற்கு சிந்தித்து செயல்படுகின்ற அறிவு உள்ளது. அதைப் பயன்படுத்தினால் நலம்.

 

nakkheeran app




விவசாயம் இல்லையென்றால் மற்ற உயிர்கள் வாழும் மனிதனைத் தவிர. நமது தமிழகத்தில் பெய்யக்கூடிய மழை நீரை முறையாக சேமித்தாலே தமிழகத்தில் எப்போதும் தண்ணீர் பஞ்சம் வராது. நல்ல தண்ணீர் மழை நீர் தான். அரியலூர் மாவட்ட மக்கள் பெரும் பகுதி கொள்ளிடம் கூட்டுக்குடிநீரையே நம்பி உள்ளனர். பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அரியலூர் பகுதி கடலாக இருந்துள்ளது. அதனால் பூமிக்கடியில் தண்ணீரை துளையிட்டு எடுக்கும் முறையை அந்தக் கால கட்டத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் கூட செய்ய முன் வராததற்கு காரணம் நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருந்திருக்க வேண்டும். கிணறுகளை நிர்மாணித்து ஊற்று நீரை பருகினார்கள். குறைந்த நீரைக் கொண்டு விவசாயம் செய்ய ஏற்றம் இறைத்தார்கள். சிறு தானியங்களை அதிகம் பயிர் செய்தார்கள். மழை நீரைக் கொண்டே விவசாயம் நடந்தது. கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, தினை, தெளிப்பு நெல், கடலை, எள், சோளம், முந்திரி, மிளகாய், மல்லி, அவரை, மொச்சை, கொண்டைக்கடலை, பாசிப்பயறு, தட்டைப்பயறு, கொள்ளு, துவரை உள்ளிட்ட சிறுதானியங்கள் விளைந்த மண் அரியலூரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பச்சை மனிதன் தங்க சண்முக சுந்தரம் ஆலோசனை கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்