ADVERTISEMENT

காவலர் கன்னத்தில் அறைந்த எஸ்பி! உயரதிகாரிகளின் மிரட்டலால் புகாரை வாபஸ் பெற்றாரா?

03:25 PM Aug 09, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் அருகே, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி, ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வாகனத்தைப் பிடிக்காத காவலரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எஸ்பி மீதான புகாரை வாபஸ் பெறும்படி அந்தக் காவலர் மிரட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

கோவை மண்டல உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி பாலாஜி. இவர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் செயல்பாடுகள் குறித்து ஆக. 7ம் தேதி ஆய்வு செய்தார். ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு, சேலத்தில் இருந்து கோவைக்கு காரில் கிளம்பினார். சேலத்தை அடுத்த காகாபாளையம் பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் ஒருவர் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் சென்று கொண்டிருந்தார்.

அதை கவனித்துவிட்ட எஸ்பி பாலாஜி, இருசக்கர வாகனத்தில் சென்றவரை காரில் விரட்டிச் சென்றார். அப்போது, காகாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கொண்டலாம்பட்டி ரோந்து வாகன சிறப்பு எஸ்ஐ அந்தோணி, ஓட்டுநர் சிவகுமார் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

ரேஷன் அரிசி கடத்தியவர், வாகனத் தணிக்கையின்போது சிக்கிக் கொள்வோம் என பயந்து, அங்குள்ள மண் சாலை வழியாக தப்பிச்செல்ல முயன்றார். அப்போது எஸ்பி பாலாஜி, ரோந்து வாகன ஓட்டுநரான காவலர் சிவகுமாரிடம் ரேஷன் அரிசி கடத்தல் வாகனத்தை மடக்கிப் பிடிக்கும்படி கூறினார்.

அப்போது அவர், வாகனத்தை துரத்திப் பிடித்தால் அவர்கள் தாக்குவார்கள் என தெரிவித்ததோடு, வாகனத்தை பிடிக்கச் செல்லாமல் அங்கேயே நின்றார். இதனால் ஆத்திரம் அடைந்த எஸ்பி பாலாஜி, ரோந்து வாகனத்தை ஓட்டுநர் சிவகுமாரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

இந்த களேபரத்தில், ரேஷன் அரிசி கடத்திய நபர், தப்பிச் சென்றுவிட்டார்.

இதற்கிடையே, காவலரை எஸ்பி அறைந்த சம்பவம் சேலம் மாநகர காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவலர் சிவகுமார் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, சேலம் மாநகர தெற்கு துணை ஆணையர் லாவண்யா விசாரணை நடத்தினார். அப்போது சிவகுமார், தன்னை அறைந்த எஸ்பி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று எழுதி கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, இந்த சம்பவத்தின் பரபரப்பு சற்று அடங்கியது.

என்றாலும், பாதிக்கப்பட்ட காவலர் முதலில் எஸ்பி மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்ததாகவும், பின்னர் அவர் மிரட்டப்பட்டதால் புகாரை திரும்பப் பெற்றதாகவும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதேநேரம், சம்பந்தப்பட்ட எஸ்பியே அந்தக் காவலரிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதன்பிறகுதான் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டாம் என்று காவலர் கேட்டுக் கொண்டதாகவும் சொல்கின்றனர்.

காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், தன் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத ஒரு காவலரிடம் வரம்பு மீறி நடந்து கொண்டதற்கு காவல்துறை வட்டாரத்திலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT