ADVERTISEMENT

‘தென் அமெரிக்கா டூ தூத்துக்குடி!’ - துறைமுகத்தில் சிக்கிய பல்லாயிரம் கோடி போதைப் பொருள்!

04:31 PM Apr 21, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஹசீஸ், பிரவுன் சுகர், அபின், கேட்டமைன் கஞ்சா, கோகய்ன் சாரஸ், கோகய்ன் போன்ற பொருட்கள் சர்வதேசப் போதைச் சந்தைகளில் புழங்குவன. இவைகள் பெரும்பாலும், கடற் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட துறைமுகங்களின் வழியே கடத்தப்படுகின்றன.

தூத்துக்குடி துறைமுகம் வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படுகிறது என்று மத்திய வருவாய்ப் புலனாய்வு யூனிட்டுக்கு வந்த ரகசியத் தகவலனடிப்படையில், துறைமுகம் வரும் வெளிநாட்டுக் கன்டெய்னர்களை மத்திய வருவாய்ப் புலனாய்வு யூனிட்டின் அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வந்திருக்கிறார்கள். நேற்றைய தினம் தென் அமெரிக்க நாடான கரிநாமிலிருந்து தூத்துக்குடியின் ஒரு நிறுவனத்திற்கு மரக்கட்டைகள் கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

கரிநாமிலிருந்து கிளம்பிய அந்தக் கப்பல் சிங்கப்பூர் இலங்கை வழியாக தூத்துக்குடி துறைமுகம் வந்திறங்கியது. அதிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 8 கன்டெய்னர்கள் மத்திய வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அந்தக் கண்டெய்னர்களை கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அவைகளில் ஒரு கன்டெய்னரில் மரக்கட்டைகளுக்கு இடையே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர். மொத்தம் சுமார் 300 கிலோ எடை கொண்ட கோகய்ன் எனப்படுகிற போதைப் பொருள் அதிலிருந்ததைக் கண்டு அதிர்ந்திருக்கிறார்கள் அதிகாரிகள்.

சர்வதேசப் போதைச் சந்தையில் இதன் மதிப்பு ரூ.1500 கோடி. வெளி நாடுகளிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டு வட மாநிலங்களுக்குக் கைமாற்றப்படலாம் என்ற சந்தேகம் உண்டு என்கிற மத்திய புலனாய்வுப் பிரவினர் சர்வதேசப் போதைக் கடத்தல் மாஃபியாக்களுடன் தொடர்புடைய இங்குள்ளவர்கள் யார் என்றும் விசாரணை நடத்திவருகிறோம் என்கிறார்கள்.

இந்தக் கப்பலை துறைமுகத்தில் ஆய்வுக்காக நிறுத்தி வைத்த அதிகாரிகள், கன்டெய்னர்களை ஆய்வுசெய்து வருகின்றனர். அதனருகே, சுங்கத்துறையினரை தவிர்த்து வேறு பாதுகாப்புத்துறையினரை அண்டவிடவில்லை. மேலும் கப்பலில் உள்ள ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டு மாலுமி மற்றும் 24 இந்திய மாலுமிகளைத் அதிகாரிகள் தரையிறங்கவும் அனுமதிக்கவில்லை.

கடந்த வாரம் சுமார் 45 லட்சம் மதிப்புள்ள ஹசீத் எனப்படும் கஞ்சா ஆயில் வெளிநாடு கடத்தப்படவிருந்ததை என்.ஐ.பி. அதிகாரிகள் மடக்கினர். கடந்த 5 மாத வேட்டையில் இங்கு மட்டும் சுமார் ரூ.2100 கோடி மதிப்பிலான போதைச் சமாச்சாரங்கள் சிக்கியது அதிகாரிகளிடையே அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT