ADVERTISEMENT

கால் நூற்றாண்டு பாச போராட்டம்; பக்ரைனிலிருந்து தந்தையை மீட்ட மகன்! 

10:40 AM Aug 01, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருங்காலங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சமுத்து(60). இவரது மனைவி நல்லம்மாள்(55). இத்தம்பதிக்கு மணிவேல் எனும் மகனும், சுந்தராம்பாள் என்ற மகளும் உள்ளனர். பிச்சமுத்து கடந்த 1993ஆம் ஆண்டு தோட்ட வேலை செய்வதற்காக பக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது முதல் சுமார் ஐந்து ஆண்டுகள் 1997 வரை பச்சமுத்து தனது குடும்பத்தினருக்கு தனது சம்பள பணம் மற்றும் அத்துடன் கடிதத்தை அனுப்பி வந்துள்ளார். அதற்குப் பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. குடும்பத்தினர் அவரை பற்றி தெரிந்து கொள்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் எந்த தகவல்களும் அவர்களுக்கு கிடைக்கவே இல்லை.

இந்நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டு மணிவேல், கட்டட வேலை செய்வதற்காக துபாய்க்கு சென்று நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதன் பிறகு தனது சொந்த ஊரிலேயே ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் பரிசோதனை செய்பவராக வேலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிற்பக்கம் கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை என்பவர், சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக பக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார். அவர் கடந்த டிசம்பர் மாதம் ஒரு அறையில் தங்கி இருந்தபோது, உடல்நிலை சரியில்லாமல் அங்கிருந்த ஒரு முதியவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் தங்கதுரை பேச்சு கொடுத்த போது, அந்த முதியவர் தனது பெயர் பச்சமுத்து என்றும் தனக்கு நேர்ந்த சிக்கல்களை கூறியதோடு, தங்கத்துரையின் கிராமமான சிறுபாக்கம் கிராமத்தில் தனக்கு முத்துசாமி என்ற உறவினர் உள்ளதையும் கூறியுள்ளார்.

உடனே தங்கதுரை, சிற்பக்கத்தில் உள்ள முத்துசாமியிடம் பேசி முதியவர் பச்சமுத்துவின் நிலை குறித்து தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து முத்துசாமி, பச்சமுத்துவின் மகன் மணிவேலுக்கு இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். அதன் பிறகு மணிவேல் பக்ரைனில் பணிபுரிந்து வரும் தனது நண்பர் நாகராஜ் என்பவரை தொடர்பு கொண்டு, தங்கத்துரை முகவரியை கூறி அங்கே சென்று தனது தந்தையை நேரில் கண்டு நிலைமையை தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளார். அதன்படி அங்கு சென்ற நாகராஜ், வீடியோ கால் மூலம் பச்சமுத்துவை தனது மகன் மணிவேலுடன் பேசவைத்துள்ளார். அப்போது தனது தந்தை பச்சமுத்து உயிருடன் இருப்பதை அறிந்த மணிவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

அவரை பக்கரையின் நாட்டில் இருந்து ஊருக்கு அழைத்து வரும் முயற்சித்த மணிவேல், தந்தையின் நிலையைக் குறித்து இந்திய தூதரகத்திற்கு தகவல் அனுப்பினார். அதைத் தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரிகள் தகவல் சரி பார்ப்பதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பச்சமுத்து குறித்து தகவலை அனுப்பி அதை உறுதி செய்யுமாறு கேட்டனர். மணிவேல், தனது தந்தையின் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கள்ளக்குறிச்சி எஸ்.பி. அலுவலகத்தில் கொண்டு போய் சமர்ப்பித்தார்.

அதன் பிறகு தூத்துக்குடியைச் சேர்ந்த அன்னை தமிழ் மன்றத் தலைவர் செந்தில்குமார் என்பவரின் உதவி மணிவேலுக்கு கிடைத்தது. அவர் மூலம், பக்ரைநாட்டில் உள்ள அன்னைத் தமிழ் மன்ற நிர்வாகிகள் பச்சமுத்து இருக்கும் இடத்திற்கு சென்று, அவருக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகளை கிடைக்கச் செய்தனர். மேலும் பக்ரைனிலிருந்து சொந்த ஊருக்கு பச்சமுத்துவை அழைத்து வருவதற்கான பணிகளை மேற்கொண்டனர். அதன்படி அன்னைத் தமிழ் மன்றச் செயலாளர் தாமரைக்கண்ணன் விமானத்தில் பச்சமுத்துவை சென்னைக்கு அழைத்துவந்தார். அங்கு மணிவேலிடம் அவரது தந்தை பச்சமுத்துவை ஒப்படைத்தார்.

தனது இரண்டரை வயதில் பிரிந்த தந்தையை 29 ஆண்டுகள் கழித்து கண்ட மகனும் தந்தையும் மகிழ்ச்சியில் கண்ணீர்விட்டு அழுதனர். அங்கிருந்து மணிவேல் மற்றும் பச்சமுத்து ஆகியோர் தங்களது சொந்தக் கிராமமான கருந்தலாகலாக்குறிச்சி கிராமத்திற்கு வந்தனர். அங்கு, பச்சமுத்துவின் மனைவி, மகள் மற்றும் உறவினர்கள் அவரைக் கண்டு மகிழ்ச்சியில் கண்ணீர்விட்டு அழுதனர்.

இதுகுறித்து பச்சமுத்து கூறியதாவது; “29 ஆண்டுகளுக்குப் பிறகு எனது வயதான காலத்தில் குடும்பத்தினருடன் ஒன்று சேர்ந்தது இறைவனின் செயல். இறுதிக்காலத்தை எனது மகன், மகள், மனைவி பிள்ளைகளோடு வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்று நான் எண்ணிய எனது ஏக்கம் கனவு தற்போது அது நிறைவேறி உள்ளது” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT