Old lady passed away police in investigation

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கோட்டையன்(70). இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சரஸ்வதியின் தங்கையான 60 வயது பாப்புவின் கணவர் இறந்து விட்டதால், கடந்த 35 வருடங்களாக பாப்பு தனது அக்கா சரசுவதியின் வீட்டிலேயே ஒன்றாகத் தங்கிவந்தார்.

Advertisment

சரஸ்வதிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பெங்களூருவில் உள்ள அவரது மகள் வீட்டிற்குச் சென்று தங்கி அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், சரஸ்வதியின் கணவர் செங்கோட்டையன், திருமணம் சம்பந்தமாக தங்களது உறவினர்களுக்குத் திருமண பத்திரிக்கை கொடுப்பதற்காக பாப்புவை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு ராசிபுரம் சென்றுள்ளார். கடந்த 5ம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் ராசிபுரத்தில் இருந்து பாப்புவுக்கு செங்கோட்டையன் ஃபோன் செய்துள்ளார். ஆனால் பாப்பு ஃபோனை எடுக்கவில்லை. இரவு நேரம் என்பதால் பாப்பு தூங்கியிருப்பார் என்று நினைத்த செங்கோட்டையன் இரவு அங்கேயே தங்கி விட்டார். மறுநாள் காலை 8 மணி அளவில் செங்கோட்டையனின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மோகன் என்பவர் செங்கோட்டையனுக்கு ஃபோன் செய்து பாப்புவை அன்றிரவு யாரோ கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டுச் சென்றுள்ளதாகத் தகவல் அளித்துள்ளார்.

Advertisment

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செங்கோட்டையன், ராசிபுரத்தில் இருந்து பதட்டத்துடன் வீட்டுக்கு வந்துள்ளார். பாப்புவின் கழுத்து அறுக்கப்பட்டிருந்ததோடு, அவரது முழங்கை உட்பட பலஇடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்துள்ளன. அதே சமயம் வீட்டிலிருந்து இரண்டு லட்சம் பணம், சுமார் 30 பவுன் நகை ஆகியவை கொள்ளை போகவில்லை. இப்படியிருக்க இந்தக் கொலை எதற்காக நடந்தது என்று அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியும் பரபரப்புமாகப் பேசிக் கொண்டனர்.

இந்த நிலையில் பாப்பு கொலை செய்யப்பட்டது குறித்த தகவலை உடனடியாக சின்னசேலம் காவல் நிலையத்திற்குத் தெரிவித்தனர். உடனடியாக கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. சுரேஷ், பயிற்சி டி.எஸ்.பி. காவியா, சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டுக் கிடந்த பாப்புவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து பாப்பு கொலை செய்த கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், கொள்ளை சம்பம் எதுவும் நிகழ்த்தாமல், எதற்காகக் கொலை மட்டும் செய்துள்ளனர் என காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.