ADVERTISEMENT

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி !எதிர்ப்பதாக நாடகமாடும் எடப்பாடி அரசு ! மக்கள் அதிகாரம் கண்டனம்

01:02 PM Sep 24, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

மக்களிடையே பிளவை ஏற்படுத்தி மீண்டும் திறக்க முயலும் ஸ்டெர்லைட் ஆலையின் சதி வேலைகளை, பொய் பிரச்சாரங்களை புறக்கணிக்க வேண்டும். கட்சி வேறுபாடுகளை கடந்து அனைவரும் போராடும் தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது ’மக்கள் அதிகாரம்’.

ADVERTISEMENT

இது குறித்து மக்கள் அதிகாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ‘’
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி நடக்கிறது. அதற்கு எடப்பாடி அரசு மறைமுகமாக துணை நிற்கிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் தங்கள் உயிரைத் தியாகம் செய்தபின், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி அறிவித்தார். அரசு தலைமை வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது அரசின் கொள்கை முடிவுதான் என விளக்கமளித்தார்.

ஸ்டெர்லைட்டை மூட பலவீனமான ஒர் அரசாணையை போட்டுவிட்டு தற்போது பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு நடத்துகிறோம் என நாடகமாடுகிறது தமிழக அரசு. அப்போதே அரசாணை மட்டும் போதாது என்றும், கொள்கை முடிவு எடுத்து சட்டமாக இயற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உட்பட பல தரப்பினரும் வலியுறுத்தினர். ஆனால் எடப்பாடி அரசு ஏறெடுத்தும் பார்க்க வில்லை.

விதிமுறை மீறல், சுற்றுசூழல் மாசு, என்பது மட்டுமல்ல, ஸ்டெர்லைட்டால் நிரந்தர அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் போன்று தாமிர உருக்கு ஆலைகளுக்கு இனி தமிழகத்தில் அனுமதி கிடையாது என்ற கொள்கை முடிவு எடுத்து அதற்கான சட்டம் இயற்றுவதுதான் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட ஒரே வழி. எவ்வாறு மராட்டிய மாநிலம், ரத்தினகிரியில் கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடினார்களோ அதே போல் தமிழகத்தில் மூட வேண்டும்.
தமிழக அரசாணைக்கு எதிராக ஸ்டெர்லைட் வேதாந்தா கம்பெனி, டெல்லி தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்து, நிர்வாகக் காரணங்களுக்காக ஆலையை திறக்கலாம் என உத்தரவை பெற்று, சீல்வைத்த ஆலையை மீண்டும் திறந்து விட்டது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் வல்லுனர் குழு மூலம் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து திறக்க முடிவு எடுக்கலாம் என்ற உத்தரவைப் பெற்றதுடன் அதில் தமிழக நீதிபதி இடம் பெறக்கூடாது எனச் சொல்லி அதிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய வருகிற 22 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை ஒரு குழு தமிழகம் வருகிறது. ஏற்கனவே குமரெட்டியபபுரம் உட்பட அருகில் உள்ள கிராமங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நிலத்தடி நீரில் ஆர்சனிக் என்ற கொடிய நச்சு, அளவுக்கு அதிகமாக உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீர் கெட்டுவிட்டது என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை ஆய்வு செய்து நிலத்தடி நீர் மாசுபட்டதற்கு ஸ்டெர்லைட் மட்டும் காரணமல்ல என சமீபத்தில் அறிக்கை அளித்து வேதாந்தாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட்டை மூடுவதில் உறுதியாக இருக்கிறோம் எனச் சொல்லும் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது.?

அரசு சீல் வைத்துள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலையால் எந்த பாதிப்பும் இல்லை என தினந்தோறும் நாளிதழ்களில் வேதாந்தா நிறுவனம் விளம்பரம் கொடுத்து வருகிறது. மேலும் பணத்தை வாரி இறைத்து விவசாய சங்கம் என்ற பெயரில் உள்ளவர்கள், லாரி உரிமையாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள், காண்டராக்டர்கள், ஆகியோரை வைத்து ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்க வைத்து மக்களை சாதி ரீதியாகப் பிளவுபடுத்துவதுடன் ஸ்டெர்லைட் ஆலைக்கு மக்களிடம் எதிர்ப்பு இல்லை என காட்ட முயல்கிறது. அதற்கு அரசும் துணை போகிறது ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என துண்டு பிரசுரம் கொடுத்தால் கூட, கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றால் ஏன் அதையே கொள்கை முடிவாக எடுக்க மறுக்கிறது?. ஆலையை மூட வேண்டும் என மக்கள் கோருவதற்கும் போராடுவதற்கும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது.? பொய் வழக்கு போட்டு கைது செய்து ஏன் அச்சுறுத்துகிறது?.

மக்களிடையே பிளவை ஏற்படுத்தி மீண்டும் திறக்க முயலும் ஸ்டெர்லைட் ஆலையின் சதி வேலைகளை, பொய் பிரச்சாரங்களை புறக்கணிக்க வேண்டும். கட்சி வேறுபாடுகளை கடந்து அனைவரும் போராடும் தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்க வேண்டும்.’’


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT