ADVERTISEMENT

மான் தோலில் அமர்ந்து அருள்வாக்கு; கோயில் நிர்வாகிகளுக்கு 1.20 லட்சம் ரூபாய் அபராதம்!

12:06 PM May 20, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் அருகே, மான் தோல் மீது அமர்ந்து அருள்வாக்கு கூறி வந்த கோயில் நிர்வாகிகள் நான்கு பேருக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 1.20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் கணேஷ் அனந்தசாமி (45). இவருடைய நண்பர்கள் சேலம் மிட்டாபுதூரைச் சேர்ந்த முத்துராமன் (54), பண்ணப்பட்டியைச் சேர்ந்த சரவணன் (36) உள்பட 5 பேர் ஒன்றாக சேர்ந்து தீவட்டிப்பட்டி தேர்முட்டி காட்டு வலவு பகுதியில் கோயில் கட்டியுள்ளனர்.

இந்த கோயிலில் வழக்கமான பூஜை மட்டுமின்றி குறி சொல்லுதல், தோஷம் நிவர்த்திக்காக பரிகாரம் செய்தல் உள்ளிட்ட சேவைகளையும் செய்து வந்துள்ளனர். குறி சொல்லும்போது மான் தோல் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லி வந்துள்ளனர்.

இதற்கிடையே, நண்பர்களுக்குள் திடீரென்று ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவர் இந்தக் குழுவில் இருந்து வெளியேறிவிட்டார். இந்நிலையில், தீவட்டிப்பட்டி தேர்முட்டி காட்டுவலவு கோயிலில் மான் தோல் மீது அமர்ந்து அருள்வாக்கு கூறுவதாக மாவட்ட வன அலுவலருக்கு கிராம மக்கள் தரப்பில் இருந்து தகவல் கிடைத்தது.

அதன்பேரில் டேனிஷ்பேட்டை வனச்சரகர் தங்கராஜூ தலைமையில் வனத்துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட கோயிலுக்குச் சென்று ஆய்வு செய்தபோது, அங்கிருந்து மான் தோலை கைப்பற்றினர். சட்ட விரோதமாக மான் தோலை பதுக்கி வைத்திருந்ததாக கோயில் நிர்வாகிகளான கணேஷ் அனந்தசாமி, முத்துராமன், சரவணன், மற்றொரு சரவணன் ஆகிய நான்கு பேரையும் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் வடமாநிலத்தில் இருந்து மான் தோலை வாங்கி வந்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து சட்ட விரோதமாக மான் தோலை பயன்படுத்திய குற்றத்திற்காக அவர்கள் நான்கு பேருக்கும் தலா 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT