ADVERTISEMENT

கோரிக்கையை ஏற்காவிட்டால் வரும் 23 ஆம் தேதி போராட்டம்! - தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு!

05:36 PM Feb 16, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் உள்ள கடை வீதியில், 'பறக்கும் பாலம்' அமைத்துத் தர வேண்டி வணிகர் சங்கங்கள் கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியிலிருந்து திருவெறும்பூர் வழியே தஞ்சை செல்லும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை மிகவும் நெரிசல் மிகுந்த சாலை. இதில், பல்வேறு சாலை விபத்துகள் தொடர்ந்து நடந்துவந்தன. இதில், நூற்றுக் கணக்கானவர்கள் இறந்தும் உள்ளனர். இதனையடுத்து திருச்சி பழைய பால் பண்ணையில் இருந்து துவாக்குடி வரை 14.5 கி.மீ தூரத்திற்கு சர்வீஸ் சாலை அமைத்துத்தர வேண்டி அப்பகுதி மக்கள் ‘சர்வீஸ் சாலை கூட்டமைப்பு’ எனும் அமைப்பை அமைத்து தொடர்ந்து 10 வருடங்களாகப் போராடி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற அரசு, இதற்கான பணியைத் தொடங்கிய பொழுது இது சம்பந்தமாக மதுரை ஐகோர்ட்டில் பலர் வழக்குத் தாக்கல் செய்தனர். தற்பொழுது வழக்கு முடிந்த நிலையில், சர்வீஸ் சாலை பணியை அரசு தொடங்கியுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் சர்வீஸ் சாலை அமைந்தால் பாதிக்கப்படும் கடைக்காரர்கள், வணிகர்கள் ஒருங்கிணைந்து சர்வீஸ் சாலை அமைக்கும் அரசுத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். கடந்த 9ம் தேதி இது குறித்து திருச்சி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்தநிலையில் இன்று காட்டூர் கடைவீதியில் கையில் கறுப்புக் கொடி ஏந்தியும் கடைகளில் கறுப்புக் கொடி ஏற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜிலு தலைமை வகித்தார். வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மாரப்பன், ரகுநாதன், டாக்டர் பிரேம் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடைகளில் கறுப்புக் கொடியை ஏற்றிய கோவிந்தராஜுலு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “திருச்சி, தஞ்சை சாலை பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 14.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்கப் பணிகளுக்காகக் கடைகள், குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உள்ளிட்டவற்றை இடித்து அப்புறப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சாலை விரிவாக்கம் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை உடனடியாக அரசு நிறுத்த வலியுறுத்துகிறோம். மேலும், பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை நிரந்தரத் தீர்வாக உயர்மட்ட பறக்கும் பாலம் அமைக்க வேண்டும். துவாக்குடி அசூர் முதல் ஜீயபுரம் வரையிலான அரைவட்ட சுற்றுச்சாலை ரிங்ரோடு திட்டம் 80 சதவீதம் முடிவடைந்த நிலையில், அதை உடனடியாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். வணிகர்களின் வாழ்வாதாரத்தை அரசு பாதுகாக்க வேண்டும். எங்களது கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் வருகின்ற 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாபெரும் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம். வரும் சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சிகளில் எங்களுக்கு ஆதரவு அளிக்காத கட்சியை எதிர்ப்போம்.

ஒரு லட்சம் வணிகர்களின் வாக்குகள் அவர்களுக்குக் கிடைக்காது. தேவைப்பட்டால் களத்தில் குதிப்போம்” என்றார். மேலும் செய்தியாளர்கள், வணிகர் சங்கம் சார்பில் தேர்தலில் போட்டியிடப் போகிறீர்களா என்று கேட்டதற்கு, “நாங்கள் ஒரு போராட்டக் குழு வைத்திருக்கிறோம். அதன்படி முடிவெடுத்து பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்துவோம்” என்று கூறினார். மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவிற்கு ஏதாவது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்களா என்று கேட்டதற்கு, “அவர்கள் மௌனம் காக்கிறார்கள். அந்த மௌனம் அவர்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT