/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3270.jpg)
திருச்சி மேலச் சிந்தாமணி பழைய கரூர் பைபாஸ் சாலையை சேர்ந்தவர் ஜாவித் (வயது 24) கார் டிரைவர். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜாவித்தின் பால்ய நண்பர் ஆசிக் பாட்ஷா (21). இவர்களது நண்பர்கள் உப்புப்பாறையை சேர்ந்த அன்சாரி, உலகநாதன், பிரசன்னா ஆகிய அனைவரும் தென்னூர் உழவர் சந்தை அருகே சம்பவத்தன்று இரவு ஒன்று கூடினர்.
இவர்கள் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர்கள், போதை ஊசி போட்டுக் கொள்வதற்காக, ஒரு மாத்திரை, 300 ரூபாய் என மொத்தம், 1,500 ரூபாய் பணத்தை கொடுத்து 5 போதை மாத்திரைகளை வாங்கி வந்துள்ளனர். டிஸ்டில்டு வாட்டர் (வடிநீர்) கொண்டு மாத்திரையை கலக்கி, அந்த கரைசலை ஊசி மூலம் உடலில் செலுத்தியுள்ளனர்.
செலுத்திய சில நிமிடத்தில் ஜாவித், சுருண்டு மயங்கி விழுந்துள்ளார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போதை நண்பர்கள், அவரை திருச்சி மகாத்மா காந்தி அரசு நினைவு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜாவித் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஜாவித் மரணம் குறித்து தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'கேன்ஸர் (புற்றுநோய்) நோயாளிகளின் கொடூரமான உடல் வலிக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரையை தான் இவர்கள் போதைக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள். தொடர்ந்து, 3 மணி நேரம் முதல், 5 மணி நேரம் வரை, நீடிக்கும் போதைக்காக, ஜாவித் உள்ளிட்ட ஐந்து பேரும், தென்னூர் அண்ணாநகரை சேர்ந்த ராம்நாத் என்பவரிடம் இருந்து, ஒரு மாத்திரை 300 ரூபாய் கொடுத்து ஐந்து மாத்திரைகள் வாங்கி இருக்கின்றனர்.
அதையடுத்து, போதை மாத்திரை சப்ளையர் ராம்நாத், ஜாவித்தின் நண்பர்கள், ஆசிக், அன்சாரி, உலகநாதன், பிரசன்னா ஆகியோர் மீது தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவுச் செய்தனர். ராம்நாத் (32), ஆசிக் பாட்ஷா (21) ஆகியோரை கைது செய்தனர். ராம்நாத்திடம் இருந்து, 18 போதை மாத்திரைகள், ஒரு போதை மருந்து பாட்டில், ஒரு ஊசி மற்றும், 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட அன்சாரி, உலகநாதன், பிரசன்னா ஆகியோரை தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)